சூடுறதும்… அடிக்கிறதும்…

 

கன்னியாகுமரி மாவட்டம், மயிலாடி, ரிங்கல் தவுபே உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக இருந்தவர் பூமணி. எனக்கு, நேரடியாக வகுப்பு எடுத்தது இல்லை. அதே பள்ளியில், மற்றொருப் பிரிவில் படித்தேன். இவர் வேறு பிரிவுக்கு தமிழ் பாடம் நடத்துவார்.
நீண்ட அரங்கை, பிரம்பு பாய்த்தட்டியால் மறைத்து, வகுப்பறைகள் உருவாக்கப்பட்டிருக்கும். மற்ற வகுப்பறைகளில், சற்று மிகைக் குரலில் ஆசிரியர் நடத்தும் பாடம், அலையாய் மற்ற வகுப்பறை வளாகங்களையும் நிறைக்கும். அந்த பாடம் இனிமையாக இருந்தால், காதுகள் அந்த வகுப்பறையில் லயித்துவிடும்.
தமிழ் ஆசிரியர் புலவர் பூமணி, நகைச்சுவை கலந்து, ஒலி பெருக்கி போல், மிகவும் சத்தமாக பாடம் நடத்துவார். வேறு வகுப்பறையில் அமர்ந்திருந்தாலும், மாணவ, மாணவியர் காதுகள் இவர் நடத்தும் பாடம் பக்கம் போய்விடும்.
செய்யுள்களை, அதற்குரிய ஓசை நயத்துடன் பாடுவார். அவர் ஓங்கிய குரல்தான், என் மனப்பாட செய்யுள்களை நினைவில் நிறுத்தின; 45 ஆண்டுகளுக்குப்பின் இப்போதும் நிறுத்தி வைத்துள்ளது. இரவலாக வாங்கிய பாடங்கள் இளமையாக மனதில் நிற்கிறது.
கம்ப ராமாயணத்தில், கும்பகர்ணனை துயில் எழ வைப்பதை, வர்ணனையுடன், சுவையாக மிகுந்த லயத்துடன், பாடி மதிய உணவுக்குப் பின் சொக்கி போகும் கண்களை திறந்து அறிவூற்றுவார். பாடிக் கிறக்குவார். உலக்கையால், உரலில் நெல் குத்துவது போல், ஏற்ற இறக்கங்களுடன் அவர் குரல், நெஞ்சில் குத்தி பதியவைக்கும்.
குகன் படகு விடும் பாடலும் அப்படித்தான். இப்போது, விமானத்தில் பயணிக்கும் போது, மேகங்களுக்கு ஊடாக நீந்தும் போது, இந்த பாடல்தான் நினைவுக்குள் வந்து உற்சாகப்படுத்தும்; அவரை நினைவு படுத்தும்.
இதையெல்லாம் மீறி மதிய உறக்கத்தில் மாணவர்கள் கிறங்குவதைக் கண்டால், அவரது உத்தி மாறிவிடும். உற்சாக குரலில் ஒரு சிறுகதை சொல்வார். அந்த கதையை மிகவும் நுாதனமாக மாற்றி மாற்றி நிகழ்த்துவார். இது அவரது வகுப்பறையில் அவ்வப்போது ஒலிக்கும்.
ஆமையும் அணிலும் என்பது கதையின் தலைப்பு…
ஆப்ரிக்காவில் உள்ள நைஜீரிய நாட்டு எழுத்தாளர் சினுவா ஆச்சபேய், Chinua Achebe எழுதிய, things fall apart என்ற நாவலில் அடிநாதமாக, இந்த கதை இருந்ததை, பல ஆண்டுகளுக்குப்பின் அந்த நாவலை வாசித்த போது, கண்டு வியந்து போனேன். அனேகமாக அவர் சொல்லிய கதைகள், திருவாங்கூர் நாட்டில் அதாவது கன்னியாகுமரி மாவட்டத்தில், பல தலைமுறைகள் வாய்மொழியாக கடந்து வந்தவை.
ஆசிரியர் பூமணி, கடவுள் மறுப்பாளர் என பின்னர் அறிந்தேன். என் கிராமத்தில் அவர் பின்பற்றிய கொள்கையை தாழம்பூ என, விமர்சித்தனர்.
வாய் நிறைய வெற்றிலையை குதப்பியபடி, காலையில் வயல்வேலைகளை செய்து கொண்டிருப்பார். எங்களுக்கு பக்கத்து வயல்… சில நாட்கள் தந்தையுடன் வயலில் வேலை செய்து கொண்டிருப்பேன். சில நேரம் இளம் பயிர் சில் காற்றில் அலைபோல் தவழ்வது அவர் இசைப்பதை நினைவுபடுத்தும்.
சுண்ணாம்பு தொட்ட ஆள்காட்டி விரல் ஆகாயம் நோக்க… இடது கையால், வேட்டியின் ஒற்றை முனையை துாக்கிப் பிடித்தபடி, கடைசி விநாடியில் அவசரமாக பள்ளி வளாகத்துக்குள் அவர் நுழைவதை பார்த்திருக்கிறேன். மாணவர்களை உற்சாகப்படுத்த, அவர் பல நகைச்சுவைகளை பகிர்வார். அதில் ஒன்று அவர் பெயர் சார்ந்தது… கொண்டையில் வைக்கிறதும்… கோயிலில் அடிக்கிறதும்… புரிகிறதா.. பூ…மணி…யை.
நான் ஒருநாள் கூட அவரது வகுப்பறையில் அமர்ந்ததில்லை… ஆனால் பல நாட்கள் அவரிடம் பாடம் கேட்டுள்ளேன்.

 

ஆசிரியர்: malaramuthan

Journalism for sustainability Since 1983

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Create your website with WordPress.com
தொடங்கவும்
%d bloggers like this: