நீங்கதான் செத்துப்போயிட்டீங்களே…

அனேகமாக, 1998 ம் ஆண்டாக இருக்கலாம். சென்னை அண்ணாசாலையில் எங்கள் அலுவலகத்துக்கு எழுத்தாளர் சுந்தரராமசாமி வந்திருந்தார். ஆசிரியருடனான சந்திப்பு முடிந்தபின் அவரை வழி அனுப்ப வெளியே வந்தோம். அங்கே ஒரு ஆட்டோ காத்திருந்தது. ‛இவர்தான் சிவதாணு, நல்ல வாசகர்’ என்று அறிமுகப்படுத்தினா் சுரா. கூடவே, ‛சென்னைக்கு எப்போது வந்தாலும், இவரது ஆட்டோவில்தான் பயணம்’ என்றார். ‛நானும் நாவுரோல்தான்’ என்று அறிமுகப்படுத்திக்கொண்டார் அவர். 

நாகர்கோவிலைத்தான் அப்படி குறிப்பிட்டார். பேரிக்காய் வடிவில் முகம். தளர்வுடன் கொஞ்சம் சடவும் தெரிந்தது. வாழ்வதற்கு கடுமையாக போராடுகிறார் என, புரிந்து கொண்டேன் . அதிகமாக பேசிக்கொள்ளவி்ல்லை.

பின்னர், அவ்வப்போது சென்னை இலக்கிய கூட்டங்களில் பார்த்துக்கொள்வோம். மறக்க முடியாத முகம். ஒருமுறை, ‛‛நான் மயிலாடியிலதான் பொண்ணு கட்டியிருக்கேன்; ஒங்களுக்கு அங்கதானே,’’ என்றார். கொஞ்சம் பேச்சு நீண்டது. 

அவரது மைத்துனர், மயிலாடி ரிங்கல்தெளபே உயர்நிலைப் பள்ளியில் என்னுடன் ஒரே வகுப்பில் படித்தவர். பேச்சு நீண்டபோது, கொஞ்சம் காரசாரம் கூடியது. வழக்கமாக மனைவியின் உடன் பிறந்தோரை வசவும், ‛நாவுரோல்’ மனநிலை கரை புரண்டது. வாழ்வதற்கு நடத்தும் போராட்டத்தில், இந்த வசவு ஒலிபரப்பு அவருக்கு கொஞ்சம் ஆறுதலைக் கொடுத்திருக்கலாம். அவரது மைத்துனரை, எனக்கு தெரியும் என்பதால், என் வழி அவரது வலி, அவருக்கு போகும் என்பதாகவும் இருக்கலாம். 

கடும் போராட்ட நெருக்கடியை பகிர்வதன் மூலம், என் முகம் அவருக்கு நம்பிக்கை அளித்திருக்கலாம்.

 பாலுமகேந்திரா உட்பட சில சினிமாக்காரர்கள் பெயர்களை அவ்வப்போது சொல்லி, அவர்கள் விரைவில் தரப்போகும் வேலை மூலம் குடும்ப தேவையை பூர்த்தி செய்து கொள்ளப்போவதாக நம்பிக்கையுடன் கூறுவார்.

ஒருநாள் அதிகாலை, தரைவழியில் தொலை பேசினார். அப்போது, அசோக்நகர், ராகவன் காலனி, முரளி ஆனந்த் அபார்ட்மெண்ட் மூன்றாம் தளத்தில் வசித்துவந்தேன். அவசரமாக ஒரு உதவி கேட்டார். வீட்டு முகவரியை குறிப்பிட்டு அழைத்தேன். காலை, 9:00 மணி வாக்கில் வந்தார். என் மகனுக்கு அப்போது வயது 3, பள்ளி செல்ல புறப்பட்டு வாகன வரவை எதிர்பார்த்து மாடியில் இருந்து அவ்வப்போது எட்டி பார்த்துக் கொண்டிருந்தான்.

மாடிஏறிவந்து கொண்டிருந்த சிவதாணுவை பார்த்தும், ‛நீங்கதான் செத்துபோயிட்டீங்களே’ என்றான்.

எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அவர் அவனை அள்ளி அணைத்து, ‛டிவி’ ல பார்த்தியா மக்கா’ என்றார். அவன் தலையசைத்தான். பொதுவாக, வீட்டில் செய்தி தவிர, வேறு எந்த நிகழ்ச்சியையும் யாரும் பார்ப்பதில்லை. விசாரித்ததில், பக்கத்து வீட்டில் விளையாடும் போது, ‛டிவி’ தொடரை பார்த்த நினைவில் அப்படி வெளிப்படித்தியுள்ளான். 

அதன்பின் எப்போது பேசினாலும், அந்த அனுபவத்தைபகிர்ந்து கொண்டு அவனை விசாரிப்பார். அதன் பின் பல முறை சந்தித்துள்ளோம். ஒருமுறை, தி.நகர் கண்ணதாசன் சிலை அருகே சிக்னலுக்காக காத்திருந்தேன். ரோகினி லாட்ஜ் பக்கம், அவர் போய்க்கொண்டிருந்தார். அழைத்தேன். குரல் கேட்டு வந்தார். பைக்கை ஓரம் கட்டி பேசினோம். கையைப் பிடித்துக் கொண்டு நலம் விசாரித்தார். ‛‛ஒங்களைப் போல சிலர்தான் கூப்பிட்டு பேசிறீங்க… பலர் பார்த்தும் பார்க்காத மாதிரி போயிடுறாங்க… பார்த்து கூப்பிட்டாலும் அப்புறம் பார்க்கலாம் என்று பறந்துடுறாங்க,’’ என்றார். இந்தமுறை, மிகவும் அமைதியாக காணப்பட்டார். திருப்தியாக இருப்பதாக கூறினார். மகன்கள் படித்து பொருள் ஈட்டுவதாக கூறினார். ‛‛இனி நல்லா வாசிக்கலாம் பாருங்க,’’ என்றார்.

கடைசியாக, பார்த்து, ஆறு மாதங்கள் இருக்கலாம். பத்திரிகையாளர் நண்பர் ரமேஷ்வைத்யாவுக்கு நினைவு இருக்கலாம். அவரைக் காண, எங்கள் ஓயிட்ஸ் ரோடு அலுவலகத்துக்கு வந்திருந்தார். சந்திப்பின் போது என்னை விசாரித்திருக்கிறார். விவரம் எனக்கு தெரியவர, அவரை சென்று சந்தித்தேன். பணி இடைவெளியில் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.அகநாழிகை பொன் வாசுதேவனும் உடன் இருந்தார். அதுவே அவரை சந்தித்த கடைசி தருணம். 

எல்லா இன்னல்களுக்கு இடையேயும் வாழ்வை வாசிப்புக்கு அர்ப்பணித்த அந்த வினோத முகத்தை மறக்க முடியவில்லை. அவர் மறைந்து விட்ட செய்தி நம்பக் கூடியதாக இல்லை. என் மகன் சொன்னது போல…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s