கல்லுாரி மாணவ, மாணவியருக்கான இதழியல் பயிலரங்கு ஒன்றை, ஆகஸ்ட் 15 ம் தேதி பிரபல இலக்கிய அமைப்பு, கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையில் நடத்தியது. இதில், பேச நண்பர் மூலம் என்னையும் முன்பதிவு செய்திருந்தனர். மாணவர்கள் என்றதால், ஆதாயம் வேண்டாமல், சொந்த செலவில் வருவதாக மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டேன்.
நிகழ்ச்சிக்கு முந்தையநாள், தாயார் மரணம். கலந்து கொள்ள முடியுமா என்ற குழப்பம். ஒப்புக் கொண்ட நிகழ்ச்சியை சாக்குப் போக்கு சொல்லி தட்டிக் கழிப்பது என் வழக்கமல்ல. ‘கண்டிப்பாக பங்கேற்பேன்’ என, நண்பரிடம் சொல்லிவிட்டேன்.
நிகழ்வு அன்று காலை கடும் மழை. கிராமத்தில், போக்குவரத்து தடை பட்டிருந்தது. சிறு மழையில் நடந்தும், பெருமழைக்கு ஒதுங்கியும் கிட்டத்தட்ட, 3 கி.மீ., கடந்து, பஸ் பிடித்தேன். நாகர்கோவிலில் பஸ் மாறினேன். குறிப்பிட்ட நேரத்தில் போய் சேர வேண்டுமே என்ற கவலை. வாக்கை காப்பாற்றிவிடுவோமா என்ற பதைபதைப்பு.
ஒருவழியாக, குறிப்பிட்ட நேரத்தில் சென்றுவிட்டேன். உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர், நீட்டி, முழக்கி பிரசங்கம் செய்து கொண்டிருந்தார். சுய ஆஹூறிதிகளாக, முறுக்கல், சாகசங்கள் என, பட்டியலிட்டு பிரஸ்தாபித்து கொண்டிருந்தார்.
கீழ் நோக்கு (Top to bottom) தொடர்பியல் முறையிலான கூச்சல். தன்னை முன்னிலைப்படுத்தி ஆதாயம் தேடும், வாய் வீச்சுடன் பாசாங்கான உடல் மொழி. குடிசை இதழ் ஆசிரியர் தோழர் இரத்தினசுவாமி, இது போன்றவற்றை, ‘வயிறு வளர்க்கும் வாய்கள்’ என்பார். தொடர்ந்த உரைகளும் வயிறு வளர்த்தன.
தவறான இடத்துக்கு வந்துவிட்டது போல் உணர்ந்தேன். பயிலரங்குக்கான தொடர்பியல் முறை இதுவல்ல. விளக்கமுறையும், கலந்துரையாடலுமே பயனளிக்கும். அதுவும், மாணவ, மாணவியரிடம் மிகுந்த பொறுப்புடன், எளிமையாக கலந்துரையாடினால் மட்டும் தான், சிறிது பயனாவது கிடைக்கும்.
எனக்கு கலந்துரையாட மட்டுமே தெரியும். உடல் மொழியால் ஆஹூருதி பண்ண தெரியாது.
நான், ஒரு வகை பணியை செய்கிறேன். பழகினால், அதை எவரும் செய்யலாம். இந்த தொழிலில் எனக்கு கிடைக்கும் அனுபவம் கொஞ்சம் சுவாரசியமானது. அதை, மெருகேற்றி பிரஸ்தாபிப்பதன் மூலம், ஒரு பயிலரங்கின் லட்சியத்தை நிறைவு செய்ய முடியாது.
என்முறை வந்தது. விளக்கமுறையில் கலந்துரையாடலுக்கு, பங்கேற்பாளர்களை தயார் செய்யும் விதமாக துவங்கினேன். நாய் மூத்திரமடித்த கல்சாமி போல, பித்துக்குளிகளை இயல்புக்கு கொண்டுவர எடுத்த முயற்சி எதுவும் பயனளிக்கவில்லை.
கிட்டத்தட்ட, 60 நிமிடங்கள், உத்திகளை மாற்றி மாற்றி தோற்றுப்போனேன். ஒரு கல்லைக் கூட, அசைக்க முடியவில்லை. ஆமாம் சாமிகள், தலையாட்டிகள்… வெறித்துக் கொண்டிருந்தன. பார்க்க அருவெறுப்பாக இருந்தது. முயன்று சோர்ந்து தோற்றுக் கொண்டிருந்தேன்.
பங்கேற்பாளர்களின் கண்கள் பிரியாணியை தேடிக்கொண்டிருந்தன.
இழப்பின் பலவீனம் ஒருபுறம். நண்பர்களின் பிரசங்கம் கேட்ட அயற்சி மறுபுறம். சுவராசியமற்ற தோல்வியால் திரும்பினேன். நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்கள், ‘ஸ்பான்சர்’ வழங்கிய பிரியாணியை, விளம்புவதில் குறியாக இருந்தனர்.
கடும் பிரயாசப்பட்டு வந்திருக்க வேண்டாமோ என்று என்னை ஒருமுறை கேட்டுக் கொண்டேன். உணவை மறுத்து அயர்ச்சியுடன் மழைத்துளிகளுக்குள் புகுந்து நடந்தேன், நேற்றை விட துயரமான மனதுடன்… எனக்கு பசிக்கவே இல்லை.
உழைப்பும், அனுபவமும் மலிவாக கிடைப்பதாக கணக்குப் போட்டு, ஸ்பான்சர்களை, தோழர்கள் தேடுவதாக எண்ணத் தோன்றுகிறது. பயிலரங்கின் பொருள் தெரியுமா உங்களுக்கு…