சினிமா, தமிழக கிராமங்களில் புகுந்து கொண்டிருந்த காலம். எங்கள் பகுதியில், வில்லுப்பாட்டு, கணியான் ஆட்டம் போன்ற கலைகள் பிரபலம். கோடைகாலத்தில், கொடை விழாக்கள், இந்த கலைகளால் சிறக்கும்.
நான் வெளியுலகத்தை உற்றுப்பார்த்த நேரம். கொடை காலம் முழுவதும், பூங்கனி என்ற பெயர் கிராமங்களில் நிரம்பி இருக்கும். அவரது வில்லிசை பொங்கி பிரவாகம் எடுக்கும். அவர் குரல் கேட்க, பறவைகள் ஓய்வெடுத்து காத்திருக்கும்.
நிறைநாழியில் நெல் அளந்து, வில் வளைத்து, அவரது குழுவினர் நாண்பூட்டும் அழகு பிரத்யேகமானது என்பர் வில்லிசை ரசிகர்கள். குடம்காரர், உடுக்கைக்காரர், பின்பாட்டுககார்களை, வீச்சுகோலால் ஒருங்கிணைத்து சுவாரசியமாக நிகழ்துவார் புலவர் பூங்கனி.
இசை வழி எளிய அசைவுடன் நடனத்தை முன்னெடுப்பார். இடுப்புக்கு மேல் உடலை மட்டும் அசையும். பாமர்களுக்கு அது ஆசுவாசம் தரும். அவரது, பின்னல் சுழற்சி, இளைஞர்களை பின்னி எடுக்கும்.
வில் வீச்சுகோல், அவர் கழுத்தை சுற்றி எப்போதாவது ஒருமுறை தான் தவழ்ந்து நகரும். அந்த வேளைக்காக கண்ணிமைக்காமல் காத்திருக்கும் ரசிகர்களை அறிவேன். பொதுவெளியில், அந்த அனுபவம், நேரம் காலம் இன்றி வர்ணிப்பு பெறும்.
நாட்டுப்புற சாமிகளை ஆட்டி வைத்ததில் அலாதியான திறன் பெற்றவர். மந்திரவாதிகள் கட்டிப்போட்ட சாமிகளை, இசையால், குரலால், நிகழ்த்துதலால் அவிழ்த்து அழைத்து ஆட வைப்பார். அற்புதங்களை நிகழ்த்துவார்.
வீட்டு விலக்கான பெண்கள், வழிபாட்டு இடங்களுக்கு வரக்கூடாது என்ற, அறியாமையை, பிற்போக்குத் தனத்தை, கலை செயல்பாடுகளால் உடைத்து நிர்மூலமாக்கியவர்.
‘மண்ணை கூட்டி வைத்து, வந்து ஆடு… என்று நான் பாடினால், கிளாச்சிட்டு கிடக்க சாமியும் வந்து ஆடும்…’ என்று ஒருமுறை என்னிடம் கறினார்.
சாமிகளின் சாமி அவர். ஆசாமிகளால் அலைக்கழிக்கப்பட்டவர். ஆசாமிகளின் அறிவீனம் அந்த மாபெரும் கலைஞரை முடக்கியது.
சில ஆண்டுகளுக்கு முன், 2009 ல், அவரை சந்திக்க சென்றிருந்தேன். குடிசையில், இரண்டு ஆடுகளுடன் படுத்திருந்தார். முன் அறிமுகம் இல்லை. அறிமுகப்படுத்திக் கொண்ட போது வியந்தார். அந்த சந்திப்பில் நெகிழ்ந்தார். மிகவும் நெகிழ்ச்சியுடன் ஒருமையில்தான் அழைப்பார். ‘ஒன்றுமற்று நிக்குற நேரம் இது… இப்போ எதுக்கு மக்கா தேடி வந்தாய்…’ என்று குலுங்கினார்.
கசப்பு சுவைகள் நிறைந்த நிச்சயமற்ற இந்திய வாழ்க்கையை நிரூபிக்கும் வகையில் அவரது அனுபவத்தை பேசிக்கொண்டிருந்தார். ‘ என்னது இருக்கு. வாழ்க்கையில… பெருமைப்பட ஒண்ணும் இல்ல… எப்படி வாழுவோம்ங்கிறத சொல்ல முடியுமா…’ என்றார்.
உண்மைதான்… நிச்சயமற்ற இந்திய வாழ்க்கை முறை அவரது.
நாளை என்ன நடக்கும்… நிச்சயமாக கூற முடியாது. அரசியலும் பொருளாதாரமும் நாளைக்கான நம்பிக்கையை அளிப்பதாக இல்லை.
இசையால், சிறு அசைவுகளால் ரசிகர்களை வசப்படுத்தியவர். உடல் மொழியால் கட்டிப் போட்டவர். உழைத்து அயர்ந்த பாமரர்களுக்கு, புத்துயிர்ப்பு ஊட்டியவர். அவர் கொடுத்தது…
சாராயம் அல்ல… ஊட்டச்சத்து…
நிகழ்வுகளின் போது, அவரை கடத்திப் போக ஒரு மைனர் கூட்டம் காத்திருக்கும். அவரது, மெல்லிய குரலில் மயங்கி, தேன் குடித்த வண்டு போல், கிறங்கிக் கிடந்தவர்களை அறிவேன். நிச்சயமற்ற வாழ்வில் நகர்ந்து வந்தவர். 12 வயதில் துவங்கி, இடையறாது பாடிக்கொண்டிருந்தார்.
வில்லிசையில் முன்னணி சம்பளம் பெற்றவர். பிரபல வில்லிசைக் கலைஞர் இலந்தவிளை முத்துசாமி கூறுகையில், ‘அந்த காலத்தில், 1970 களில், ஒரு வில்லிசை நிகழ்ச்சிக்கு, நான், 15 ரூபாய் சம்பளம் பெற்றேன். அதே நாட்களில் பூங்கனிக்கு, 150 ரூபாய் சம்பளம்…’ என, குறிப்பிட்டார்.
நிச்சயமற்ற, நம்பிக்கை சிதைந்த சமுதாயத்தில், வீச்சு கோலை உயர்த்தி, இனிய குரலால், உழைக்கும் மக்கள் வாழ்வின் மீது நம்பிக்கை ஏற்படுத்த முயன்றவர்.
அவரது கோல் வீச்சு, பாட்டு வீரியம், ஆட்ட லயிப்பு எல்லாம் ஒரு தலைமுறையின் நம்பிக்கை. அது, உற்பத்தி சார்ந்தது. அடுத்த பருவ விளைச்சலுக்கான நம்பிக்கையை தந்த கலை.
உற்பத்தியுடன் பின்னி கிடந்த கிராமிய கதைப்பாடலின் முகம், இன்று மாறிவிட்டது. அது, மதங்களுக்கு விளைச்சலை ஏற்படுத்துகிறது. தடத்தின், தடயங்களை அழித்து தரமிழந்து விட்டது.
அறுவடையால் தளர்ந்த உடல்களை ஆற்றுப்படுத்தும் கலைஞராக பூங்கனி இருந்தார். இப்போது, அவரது நினைவு மட்டும்…
செய்தி
பூங்கனி, 86. வில்லிசைக்க வந்த இரண்டாவது பெண் கலைஞர். கன்னியாகுமரி மாவட்டம், கொட்டாரம் கிராமத்தில் வசித்து வந்தார். 2018 நவம்பர், 1 இரவு, 11:00 மணிக்கு முதுமையால் காலமானார். பல ஆயிரம் வில்லிசை நிகழ்ச்சிகள் நடத்தியவர். சென்னை பல்கலைக் கழகம் இதழியல் துறை வழங்கிய, ‘ஓம் முத்துமாரி விருது’ பெற்றவர்.