Design a site like this with WordPress.com
தொடங்கவும்

வீடுறையும் காடு

2020 மே, 24 ம் தேதி ஞாயிறு முன் இரவு.

உணவுக்கு பின், மாடியில் சற்று உலாவிக் கொண்டிருந்தேன். ஆசுவாசத்தில் சாலையை கவனித்த போது, எகிறி குதித்து பாய்தோடி, மழைநீர் வடிகால்வாய்க்குள் புகுந்தது கீரி. தெரு விளக்கின் ஒளியில் அதன் துள்ளல் துல்லியமாக தெரிந்தது. சென்னை, குழுவாக வாழும் சாம்பல் கீரிகள் நிறைந்த நகரம். அதன் வாழ்வியல் வியக்க வைக்கும். சென்னை வாழ்வில், 1987 முதல் கவனித்து வருகிறேன்.

உலாவல் முடித்து படிக்கட்டில் இறங்கிய போது, உள்ளுணர்வு நிறுத்தியது. உற்றுப் பார்த்தேன். காற்றில் சுழற்சியில், படி மடிப்பில் தீவாக தயங்கி கிடந்த இலை சருகுகள்.

அதன் மத்தியில் சிறு அசைவு. உற்று கவனித்தேன்.

Violin Mantis. கிராமத்தில், அடிக்கடி பார்த்திருக்கிறேன். எங்கள் ஊர்வாசிகள், ‘கும்பிடு புட்டான்’ என்பர். மென்சிறகி என்பதால் இந்த பெயர். நம்மை சூழ வாழும் ஒர் உயிரினத்தின், தமிழ் பெயர் என்ன… வயலின் போன்ற அமைப்புள்ளதால் ஆங்கிலத்தில் வயலின் மாண்டிஸ் என்கின்றனர்.

இந்த உயினம் குறித்து இணைய தேடலில் கிடைத்தவை…

தமிழ் லெக்சிகன் என்ற அகரமுதலி, பூச்சிகளை தின்னும் பெரும் பூச்சி வகை என்று மட்டும் குறிப்பிட்டுள்ளது. குறிப்பான பெயரை குறிப்பிடவில்லை. தமிழ் விக்கிபீடியா, இடையன்பூச்சி, மழைப்பூச்சி, கும்பிடு பூச்சி என்று குறிப்பிட்டுள்ளது. இணைய தளத்தில் உள்ள பல தமிழ் அகராதிகள், ‘மாண்டிஸ்’ என்று கடமையை முடித்துவிட்டன.

studysite.org என்ற இணைய தளம், praying mantis என குறிப்பிட்டு, தமிழ் பெயராக, ‘கும்பிடு மாண்டிஸ்’ என தெரிவித்துள்ளது. பிளிக்கரில் படம் பதிவிட்டுள்ள, ஸ்ரீநாத் ரகு என்பவர், மரவட்டை என குறித்துள்ளார்.

கூகுள் இணைய தளத்தில் உள்ள பழைய அகராதி ஒன்று, Mantis ஐ ‘தவிட்டுக்கிளி’ என பெயர்த்துள்ளது. அலாமி.காம் என்ற இணைய தளம், படத்தை வெளியிட்டு, Similar to the Violin praying mantis என்று குறிப்பிட்டுள்ளது. படம், 2009 டிசம்பர் 12ல், திருநெல்வேலியில் எடுத்ததாக குறிப்பிட்டுள்ளது.

தமிழகத்தில் வட்டார ரீதியாக மக்கள் வழக்கில் இதன் தமிழ் பெயர் என்ன… பூச்சியியல் அறிஞர்கள் என்ன பெயர் கொண்டுள்ளனர். அறிய வசதியாக பதிவிட வேண்டுகிறேன். சூழலின் கண்ணியில் இந்த உயிரினம் பற்றி அறியும் ஆவலுடன் இருக்கிறேன்.

***

நெதர்லாந்து நாட்டில் உள்ள குரோனிங்ஜன் பல்கலையில் University of Groningen, The Netherland  பூச்சி இனங்கள் குறித்து ஆய்வு செய்து வருபவர் லிண்டா. இவர், 19 வகையான மாண்டிஸ் பற்றி விரிவாக குறிப்பிட்டு்ளளார். நான் பதிவிட்டுள்ள படம் அவரது, இணைய தளத்தில் இல்லை. ஆனால் அது போன்ற வகையை, Wandering Violin Mantis என ஆங்கிலத்தில் வரையறுத்து்ளளார். அதற்கான லத்தின் பெயராக, Gongylus gongylodes என்று வரையறை செய்துள்ளார்.

நான் பதிவிட்டுள்ள மாண்டிஸ், தென்னிந்தியா மற்றும் இலங்கையை தயாகமாக கொண்டது. மிக அமைதியான உயிரினம். இரைக்காக அலைபாயாது. நிதானமாக காத்திருந்து பறக்கும் பூச்சிகளை பிடித்து உண்ணும். இரை கிடைக்காத போது, தன் இனத்தை சேர்ந்தவற்றை உண்ணும், Cannibalism என்ற பண்பு கொண்டது. இதை, தன்னின உயிருண்ணி என, தமிழில் மொழி பெயர்த்துள்ளனர். சரியான சொல்லாக படவில்லை.

இணை சேர்ந்த பின் ஓத்திகா என்ற வகை முட்டை பையை வெளியிடும். அதில், 30 முதல், 40 முட்டைகள் வரை இருக்கும். பொரித்து புழுக்கள் வெளிவரும். இதன் முக்கிய உணவு, வீட்டில் பறக்கும் ஈக்கள் என்று கூறப்படுகிறது.

பகலில், 30 டிகிரி முதல் 40 டிகிரி வரையிலான வெப்பத்தில் சுகமாக வாழும். இரவு வெப்பநிலை, 20 டிகிரி போதும். இளம் பூச்சியில் ஆணை விட, பெண் சற்று பெரியதாக இருக்கும். இனப்பெருக்கத்துக்காக, ஒரே ஒரு முறை மட்டுமே கூடும்.

கிராமத்தில், அறுவடைக்கு பிந்தைய காலத்தில் பார்த்திருக்கிறேன். சென்னையில் மைய கோடையில் நேற்று கண்டேன். முதலில் லேசாக அசைந்தாலும், பின் மிகவும் நிதானமாவே காணப்பட்டது. கிட்டத்தட்ட, 10 நிமிடங்கள் அதை கவனித்தேன். நகரவில்லை. சூழலில் இதன் இடம் என்ன என்பதை அறிஞர்கள் விளக்கினால் அறியும் ஆவல் பெருகும்.

வீடுறை காட்டை பராமரிப்பது சற்று கடினமானது தான். கொஞ்சம் பயிற்சி இருந்தால் மகிழ்ச்சி மலரும்

#தடமும் தடயமும்

குறிப்பறியா குறிப்பு

மரணம் நிகழ்ந்துவிட்டதாக காலையில் செய்தி வந்தது. இது யாரையும் பாதித்திருக்க வாய்ப்பில்லை. யாரும் அஞ்சலிக் குறிப்பு எழுதப்போவதுமில்லை. அக்கம் பக்கத்தவர் சொல்லும், ‘ கிடையில் விழுந்து அழுந்தாமல் போனாரே’ என்ற வார்த்தைகள் மட்டுமே மறைந்தவருக்கு அனுகூலமானவை. .

உலகத்துக்கோ, இந்தியாவுக்கோ, தமிழ்நாட்டுக்கோ, கன்னியாகுமரி மாவட்டத்துக்கோ, ஆலடிவிளை  ஊருக்கோ, அவர் மரணத்தால் இழப்பு எதுவும் இல்லை. சொல்லப்போனால், தமிழக அரசுக்கு கொஞ்சம் அனுசரணை உண்டு.

 ஆம்… அவருக்கு வழங்க வேண்டிய, மாதாந்திர உதவித்தொகையை, அரசு இனி வழங்க வேண்டியதில்லை. அவர் குறித்த ஆவணங்கள் எதையும் பராமரிக்க வேண்டியதில்லை.

உலகமோ அல்லது வாழ்ந்த வட்டாரமோ  நன்மை பெற அவர் செய்த  சேவை ஏதாவது உண்டா…

ஏராளம்… ஏராளம்…

செல்லம் என்ற செல்லம்மா, 2018 மே 28, காலை மரணம் அடைந்தார். அனேகமாக, 87 வயதுக்குள் இருக்கலாம். கன்னியாகுமரி மாவட்டம், ஆலடிவிளை ஊரில், மருந்துவாழ்மலை வலது பாசனக்கால்வாய் ஓரம், பொதுப்பணி்த்துறை புறம்போக்கு நிலத்தில் குடிசை அமைத்து குடியிருந்தார்.

நீண்ட தனிமையான வாழ்க்கை.

மண வாழ்க்கை முறையாக அமையவில்லை.  16 வது வயதில் கன்னிமேரி  கதைபோல் ஒரு பெண் குழந்தைக்கு தாயானார்.

அப்போது நான் பிறந்திருக்கவில்லை. கதையை பிறர் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன்.

தன்னந்தனியாக வாழ்க்கை.விவசாய துணை வேலைகள் செய்வார். நாற்று நட, களை எடுக்க என்று, கூலி வேலைக்கு செல்வார்.

சிறுவனாக இருந்த போதே, அவரது வேலை ஒருங்கிணைப்பு ஆளுமை கண்டு வியந்திருக்கிறேன். 60 முதல் 70 பெண்கள் கொண்ட குழுவை, மிகச் சிறந்த ஆளுமையுடன் வழிநடத்துவார். விவசாய துணைப் பணிகளை ஏற்பது, பகிர்வது, சம்பளம் பெற்று கொடுப்பது, கண்காணிப்பது, வழி நடத்துவது என, அவரது ஆளுமை பரந்து விரிந்து  கிடந்ததைக் கண்டு வியந்திருக்கிறேன்.

ஒருங்கிணைப்பை மட்டுமே செய்யாமல், அவர்களில் ஒருவராக களத்தில் பணியாற்றுவார். எங்கள் வயல்களில் வேலைக்கு அவரது குழுவினர்தான். ஒருங்கிணைப்பை, கூலி பெறும் பணியாக பார்க்க மாட்டார்.

செயல்கள் எல்லாம்  வெட்டு ஒன்று, துண்டு ரெண்டு என கறாராக இருக்கும். கனிவானவர், கடும் முன் கோபி, கோபம் எழுச்சி  பெ றும் போது, வார்த்தைகளுக்கு பொருள் தேட சிரமப்பட வேண்டியிருக்கும். எல்லாம் அத்துடன் முடிந்துவிட்டதாக வசவுகளை வீசி சடைவார்.

 மறுநாள் எல்லாம் மறையும்… புது துலக்கத்துடன் வருவார்.

பணி ஒருங்கிணைப்பில், உழைப்பு சுரண்டலை அதிகம் இருக்கும். அரசு மற்றும் தனியார் நிர்வாகங்களில்  மேல் மட்டத்தில் இருந்து சாதாரண கூலி பணிகளில் வரை சுரண்டல் சுழன்றடிப்பதை பார்த்திருக்கிறேன். இவரது உழைப்பு குழுவில் ஒரு முறை கூட, உழைப்பு சுரண்டல்  நடந்ததாக அறிந்ததில்லை. அது போன்ற விமர்சனத்தையும் கேட்டதில்லை.

நடத்தை விஷயத்திலும் அப்படித்தான். உடல் இச்சைக்காய் அவர் ஓடித்திரிந்ததாக ஒரு விரல் கூட சுட்டியதில்லை.

ஒரே உறவு… ஒரே குழந்தை… பின் இறுக்கம் நிறைந்த மனநிலையுடன் வாழ்க்கை.

சுற்றித்திரிந்த ஆண் குரங்குகளிடம், பிடிபடாமல் கிட்டத்தட்ட, 70 வருடங்களை கடந்துள்ளார் என்பது வியப்பாக இருக்கிறது.

அவரது வாழ்க்கை போராட்டமானது… ஆனால் நம்பிக்கை நிறைந்தது.  பேச்சு வாக்கில் பல முறை, அந்த நம்பிக்கையின் அடிநாதம் பற்றி கேட்டு அறிய முயன்றுள்ளேன்.

 ஒருமுறை கூட  அனுபவ வெளியை, இழித்தோ, பழித்தோ பேசியதில்லை. எதையும் விமர்சனப் பூர்வமாக கொண்டதில்லை. சிந்திக்க மறுக்கிறாரோ என்று கூட நினைத்திருக்கிறேன்.

அவரது வியப்பான தோல்வி, ஒரு சிலையாக நிற்கிறது. அதை தினமும் வணங்கவும் அவர் தயங்கவில்லை. ஒருமுறை இது பற்றி கேட்டேன். எந்த அதிருப்தியும் தெரிவிக்கவில்லை. அதை நம்பிக்கையாக பார்ப்பதாக சொன்னார்.

அவரது வாழ்வு வியப்புகளால் நிரம்பியது. அவரது நம்பிக்கையும், உறுதியும் மேன்மையை காட்டுவது… உற்பத்தியில் அவரது உழைப்பு  அளவிட முடியாதது.

நீண்ட துயிலுக்கு போய்விட்ட அவரது, உடல்  மற்றொன்றாய் மாறிக் கொண்டிருக்கிறது. கண்ணீர் அஞ்சலி.

அறுவடை வலியை ஆற்றுப்படுத்திய கலைஞர்

சினிமா, தமிழக கிராமங்களில் புகுந்து கொண்டிருந்த காலம். எங்கள் பகுதியில், வில்லுப்பாட்டு, கணியான் ஆட்டம் போன்ற கலைகள் பிரபலம். கோடைகாலத்தில், கொடை விழாக்கள், இந்த கலைகளால் சிறக்கும்.
நான் வெளியுலகத்தை உற்றுப்பார்த்த நேரம். கொடை காலம் முழுவதும், பூங்கனி என்ற பெயர் கிராமங்களில் நிரம்பி இருக்கும். அவரது வில்லிசை பொங்கி பிரவாகம் எடுக்கும். அவர் குரல் கேட்க, பறவைகள் ஓய்வெடுத்து காத்திருக்கும்.
நிறைநாழியில் நெல் அளந்து, வில் வளைத்து, அவரது குழுவினர் நாண்பூட்டும் அழகு பிரத்யேகமானது என்பர் வில்லிசை ரசிகர்கள். குடம்காரர், உடுக்கைக்காரர், பின்பாட்டுககார்களை, வீச்சுகோலால் ஒருங்கிணைத்து சுவாரசியமாக நிகழ்துவார் புலவர் பூங்கனி.
இசை வழி எளிய அசைவுடன் நடனத்தை முன்னெடுப்பார். இடுப்புக்கு மேல் உடலை மட்டும் அசையும். பாமர்களுக்கு அது ஆசுவாசம் தரும். அவரது, பின்னல் சுழற்சி, இளைஞர்களை பின்னி எடுக்கும்.
வில் வீச்சுகோல், அவர் கழுத்தை சுற்றி எப்போதாவது ஒருமுறை தான் தவழ்ந்து நகரும். அந்த வேளைக்காக கண்ணிமைக்காமல் காத்திருக்கும் ரசிகர்களை அறிவேன். பொதுவெளியில், அந்த அனுபவம், நேரம் காலம் இன்றி வர்ணிப்பு பெறும்.
நாட்டுப்புற சாமிகளை ஆட்டி வைத்ததில் அலாதியான திறன் பெற்றவர். மந்திரவாதிகள் கட்டிப்போட்ட சாமிகளை, இசையால், குரலால், நிகழ்த்துதலால் அவிழ்த்து அழைத்து ஆட வைப்பார். அற்புதங்களை நிகழ்த்துவார்.
வீட்டு விலக்கான பெண்கள், வழிபாட்டு இடங்களுக்கு வரக்கூடாது என்ற, அறியாமையை, பிற்போக்குத் தனத்தை, கலை செயல்பாடுகளால் உடைத்து நிர்மூலமாக்கியவர்.
‘மண்ணை கூட்டி வைத்து, வந்து ஆடு… என்று நான் பாடினால், கிளாச்சிட்டு கிடக்க சாமியும் வந்து ஆடும்…’ என்று ஒருமுறை என்னிடம் கறினார்.
சாமிகளின் சாமி அவர். ஆசாமிகளால் அலைக்கழிக்கப்பட்டவர். ஆசாமிகளின் அறிவீனம் அந்த மாபெரும் கலைஞரை முடக்கியது.
சில ஆண்டுகளுக்கு முன், 2009 ல், அவரை சந்திக்க சென்றிருந்தேன். குடிசையில், இரண்டு ஆடுகளுடன் படுத்திருந்தார். முன் அறிமுகம் இல்லை. அறிமுகப்படுத்திக் கொண்ட போது வியந்தார். அந்த சந்திப்பில் நெகிழ்ந்தார். மிகவும் நெகிழ்ச்சியுடன் ஒருமையில்தான் அழைப்பார். ‘ஒன்றுமற்று நிக்குற நேரம் இது… இப்போ எதுக்கு மக்கா தேடி வந்தாய்…’ என்று குலுங்கினார்.
கசப்பு சுவைகள் நிறைந்த நிச்சயமற்ற இந்திய வாழ்க்கையை நிரூபிக்கும் வகையில் அவரது அனுபவத்தை பேசிக்கொண்டிருந்தார். ‘ என்னது இருக்கு. வாழ்க்கையில… பெருமைப்பட ஒண்ணும் இல்ல… எப்படி வாழுவோம்ங்கிறத சொல்ல முடியுமா…’ என்றார்.
உண்மைதான்… நிச்சயமற்ற இந்திய வாழ்க்கை முறை அவரது.
நாளை என்ன நடக்கும்… நிச்சயமாக கூற முடியாது. அரசியலும் பொருளாதாரமும் நாளைக்கான நம்பிக்கையை அளிப்பதாக இல்லை.
இசையால், சிறு அசைவுகளால் ரசிகர்களை வசப்படுத்தியவர். உடல் மொழியால் கட்டிப் போட்டவர். உழைத்து அயர்ந்த பாமரர்களுக்கு, புத்துயிர்ப்பு ஊட்டியவர். அவர் கொடுத்தது…
சாராயம் அல்ல… ஊட்டச்சத்து…
நிகழ்வுகளின் போது, அவரை கடத்திப் போக ஒரு மைனர் கூட்டம் காத்திருக்கும். அவரது, மெல்லிய குரலில் மயங்கி, தேன் குடித்த வண்டு போல், கிறங்கிக் கிடந்தவர்களை அறிவேன். நிச்சயமற்ற வாழ்வில் நகர்ந்து வந்தவர். 12 வயதில் துவங்கி, இடையறாது பாடிக்கொண்டிருந்தார்.
வில்லிசையில் முன்னணி சம்பளம் பெற்றவர். பிரபல வில்லிசைக் கலைஞர் இலந்தவிளை முத்துசாமி கூறுகையில், ‘அந்த காலத்தில், 1970 களில், ஒரு வில்லிசை நிகழ்ச்சிக்கு, நான், 15 ரூபாய் சம்பளம் பெற்றேன். அதே நாட்களில் பூங்கனிக்கு, 150 ரூபாய் சம்பளம்…’ என, குறிப்பிட்டார்.
நிச்சயமற்ற, நம்பிக்கை சிதைந்த சமுதாயத்தில், வீச்சு கோலை உயர்த்தி, இனிய குரலால், உழைக்கும் மக்கள் வாழ்வின் மீது நம்பிக்கை ஏற்படுத்த முயன்றவர்.
அவரது கோல் வீச்சு, பாட்டு வீரியம், ஆட்ட லயிப்பு எல்லாம் ஒரு தலைமுறையின் நம்பிக்கை. அது, உற்பத்தி சார்ந்தது. அடுத்த பருவ விளைச்சலுக்கான நம்பிக்கையை தந்த கலை.
உற்பத்தியுடன் பின்னி கிடந்த கிராமிய கதைப்பாடலின் முகம், இன்று மாறிவிட்டது. அது, மதங்களுக்கு விளைச்சலை ஏற்படுத்துகிறது. தடத்தின், தடயங்களை அழித்து தரமிழந்து விட்டது.
அறுவடையால் தளர்ந்த உடல்களை ஆற்றுப்படுத்தும் கலைஞராக பூங்கனி இருந்தார். இப்போது, அவரது நினைவு மட்டும்…
செய்தி
பூங்கனி, 86. வில்லிசைக்க வந்த இரண்டாவது பெண் கலைஞர். கன்னியாகுமரி மாவட்டம், கொட்டாரம் கிராமத்தில் வசித்து வந்தார். 2018 நவம்பர், 1 இரவு, 11:00 மணிக்கு முதுமையால் காலமானார். பல ஆயிரம் வில்லிசை நிகழ்ச்சிகள் நடத்தியவர். சென்னை பல்கலைக் கழகம் இதழியல் துறை வழங்கிய, ‘ஓம் முத்துமாரி விருது’ பெற்றவர்.

சுவாரசியமற்ற தோல்வி

கல்லுாரி மாணவ, மாணவியருக்கான இதழியல் பயிலரங்கு ஒன்றை, ஆகஸ்ட் 15 ம் தேதி பிரபல இலக்கிய அமைப்பு, கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையில் நடத்தியது. இதில், பேச நண்பர் மூலம் என்னையும் முன்பதிவு செய்திருந்தனர். மாணவர்கள் என்றதால், ஆதாயம் வேண்டாமல், சொந்த செலவில் வருவதாக மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டேன்.
நிகழ்ச்சிக்கு முந்தையநாள், தாயார் மரணம். கலந்து கொள்ள முடியுமா என்ற குழப்பம். ஒப்புக் கொண்ட நிகழ்ச்சியை சாக்குப் போக்கு சொல்லி தட்டிக் கழிப்பது என் வழக்கமல்ல. ‘கண்டிப்பாக பங்கேற்பேன்’ என, நண்பரிடம் சொல்லிவிட்டேன்.
நிகழ்வு அன்று காலை கடும் மழை. கிராமத்தில், போக்குவரத்து தடை பட்டிருந்தது. சிறு மழையில் நடந்தும், பெருமழைக்கு ஒதுங்கியும் கிட்டத்தட்ட, 3 கி.மீ., கடந்து, பஸ் பிடித்தேன். நாகர்கோவிலில் பஸ் மாறினேன். குறிப்பிட்ட நேரத்தில் போய் சேர வேண்டுமே என்ற கவலை. வாக்கை காப்பாற்றிவிடுவோமா என்ற பதைபதைப்பு.
ஒருவழியாக, குறிப்பிட்ட நேரத்தில் சென்றுவிட்டேன். உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர், நீட்டி, முழக்கி பிரசங்கம் செய்து கொண்டிருந்தார். சுய ஆஹூறிதிகளாக, முறுக்கல், சாகசங்கள் என, பட்டியலிட்டு பிரஸ்தாபித்து கொண்டிருந்தார்.
கீழ் நோக்கு (Top to bottom) தொடர்பியல் முறையிலான கூச்சல். தன்னை முன்னிலைப்படுத்தி ஆதாயம் தேடும், வாய் வீச்சுடன் பாசாங்கான உடல் மொழி. குடிசை இதழ் ஆசிரியர் தோழர் இரத்தினசுவாமி, இது போன்றவற்றை, ‘வயிறு வளர்க்கும் வாய்கள்’ என்பார். தொடர்ந்த உரைகளும் வயிறு வளர்த்தன.
தவறான இடத்துக்கு வந்துவிட்டது போல் உணர்ந்தேன். பயிலரங்குக்கான தொடர்பியல் முறை இதுவல்ல. விளக்கமுறையும், கலந்துரையாடலுமே பயனளிக்கும். அதுவும், மாணவ, மாணவியரிடம் மிகுந்த பொறுப்புடன், எளிமையாக கலந்துரையாடினால் மட்டும் தான், சிறிது பயனாவது கிடைக்கும்.
எனக்கு கலந்துரையாட மட்டுமே தெரியும். உடல் மொழியால் ஆஹூருதி பண்ண தெரியாது.
நான், ஒரு வகை பணியை செய்கிறேன். பழகினால், அதை எவரும் செய்யலாம். இந்த தொழிலில் எனக்கு கிடைக்கும் அனுபவம் கொஞ்சம் சுவாரசியமானது. அதை, மெருகேற்றி பிரஸ்தாபிப்பதன் மூலம், ஒரு பயிலரங்கின் லட்சியத்தை நிறைவு செய்ய முடியாது.
என்முறை வந்தது. விளக்கமுறையில் கலந்துரையாடலுக்கு, பங்கேற்பாளர்களை தயார் செய்யும் விதமாக துவங்கினேன். நாய் மூத்திரமடித்த கல்சாமி போல, பித்துக்குளிகளை இயல்புக்கு கொண்டுவர எடுத்த முயற்சி எதுவும் பயனளிக்கவில்லை.
கிட்டத்தட்ட, 60 நிமிடங்கள், உத்திகளை மாற்றி மாற்றி தோற்றுப்போனேன். ஒரு கல்லைக் கூட, அசைக்க முடியவில்லை. ஆமாம் சாமிகள், தலையாட்டிகள்… வெறித்துக் கொண்டிருந்தன. பார்க்க அருவெறுப்பாக இருந்தது. முயன்று சோர்ந்து தோற்றுக் கொண்டிருந்தேன்.
பங்கேற்பாளர்களின் கண்கள் பிரியாணியை தேடிக்கொண்டிருந்தன.
இழப்பின் பலவீனம் ஒருபுறம். நண்பர்களின் பிரசங்கம் கேட்ட அயற்சி மறுபுறம். சுவராசியமற்ற தோல்வியால் திரும்பினேன். நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்கள், ‘ஸ்பான்சர்’ வழங்கிய பிரியாணியை, விளம்புவதில் குறியாக இருந்தனர்.
கடும் பிரயாசப்பட்டு வந்திருக்க வேண்டாமோ என்று என்னை ஒருமுறை கேட்டுக் கொண்டேன். உணவை மறுத்து அயர்ச்சியுடன் மழைத்துளிகளுக்குள் புகுந்து நடந்தேன், நேற்றை விட துயரமான மனதுடன்… எனக்கு பசிக்கவே இல்லை.
உழைப்பும், அனுபவமும் மலிவாக கிடைப்பதாக கணக்குப் போட்டு, ஸ்பான்சர்களை, தோழர்கள் தேடுவதாக எண்ணத் தோன்றுகிறது. பயிலரங்கின் பொருள் தெரியுமா உங்களுக்கு…

கடுவாய் அனுப்பிய துண்டு சீட்டு

பள்ளிக்கு, காலை, 8:00 மணிக்கு முன்பே கடுவாய் வந்துவிடும். வளாகத்தை நிதானமாக அளந்து, செடி, கொடி, மரம், வழி அரண் அரளிகள், கிணற்றடி, தோட்டம், கக்கூசுகள், ஸ்டாப் ரூம், வகுப்பறை, ஆய்வகம் என, கூர் நோக்கி, கண்காணிக்கும். பின், அலுவலக அறைக்கு சென்று அமரும்.
பள்ளி, ‘ப’ வடிவ கட்டடத்தில், தென்கிழக்கு மூலையில், அந்த அறை இருந்தது. எப்போதாவது, வகுப்பறைகள் இரைச்சலால் அதிர்ந்தால், நாற்காலியின் இழுவை ஒலி கேட்கும். அவ்வளவுதான்… அனைத்தும் அடங்கிவிடும். அமைதி துலங்கி நிற்கும்.
பள்ளி வளாகத்துக்குள் வர இரண்டு வழிகள். இரண்டும் எதிர் திசைகளில்… அவற்றை, கண்காணிக்கும் பாணி வியப்பூட்டும். புதிதாக நுழைபவரை, மிக எளிதாக கண்டுபிடித்துவிடும் திறன்மிக்க கடுவாய் அது.
மயிலாடி, ரிங்கல் தொபே பள்ளியில், 6 ம் வகுப்பு சேரும் முன், அச்சுறுத்தலோடு அறிமுகமான பெயர்தான் கடுவாய். சேர்ந்த பின், அந்த பெயர் மறைந்து, ஒய்.ஆர்.டி., என்பது, மனதில் நிறைந்தது. தலைமை ஆசிரியர் ஒய். ரெஜினால்டு டேவிஸ் பெயர் சுருக்கம்தான் அது.
ஆறு ஆண்டுகள்… அவரது ஆளுமையைப் பார்த்து வியந்திருக்கிறேன். ஒழுக்கத்தை, நேர்மையை, எங்கள் வாழ்வுடன் இணைக்க, அவரது நடத்தை, முன் நிபந்தனையாக இருந்தது. என் அப்பா கற்றுத்தந்தவறை, வலுவாக்கிய தளம் அவரது.
காலை, 8:00 மணிக்கு முன் துவங்கி, இரவு, 7:00 மணிக்கு பின் முடியும் அவரது பணி. எங்கேயும் இருப்பார். எது நடந்தாலும் கவனத்துக்கு சென்றுவிடும். கல்வி சுற்றலாக்களில் அவர் பங்கேற்க மாட்டார். ஆனால், புறப்படும் போதும், முடியும் போதும் அவர் இருப்பார். ஆசிரியர்களுடன், அரட்டை அடிக்கமாட்டார்; வளர்ச்சி உரையாடல் நடத்துவார்.
அது, 9 ம் வகுப்பில் என்று நினைவு. அதிகாலையில், அப்பாவுடன் வயலுக்கு சென்றுவிட்டேன். பருவமழை காலம். மேகம் கவிந்திருந்ததால், நேரம் சரியாக தெரியவில்லை. தாமதம் ஆகிவிட்டது. சாலையில் நின்று பள்ளி வளாகத்தை கவனித்தேன். அவர், கண்ணில் படவில்லை.
உறுதி செய்தபடி, ஓரமாக நகர்ந்து, வகுப்புக்கு போய்விட்டேன். சற்று நேரத்தில், பீயுன் ஒரு துண்டு சீட்டை வகுப்பு ஆசிரியரிடம் கொடுத்தார். தலைமை ஆசிரியர், என்னை அழைத்த சீட்டு அது.
பயந்து நடுங்கியபடி, அவர் அறைக்குப் போனேன். அவரது கைகடிகார சங்கிலி அவிழ, அவிழ அடியும், குத்தும் வாங்கி வந்தேன். மதிய இடைவேளைக்கு பின் மீண்டும் அழைப்பு. நடுங்கிக் கொண்டே போனேன்.
‘வயலுல இருந்து தானே வந்தே… பின்னே நேரா கிளாசுக்கு போக வேண்டியதுதானே. ஏன் ஒளிச்சே…’ என, நெகிழ்ந்தார். ஒழுக்கமும், நேர்மையும், நிர்வாகத்திறனும், காலந்தவறாமையும், அழகியலும்… சொல்லிக் கொண்டே போகலாம் கீர்த்தியை.
பள்ளி வளாகத்தில், அழகிய வடிவமைப்புடன் தோட்டம் இருந்தது. தங்க அரளி செடிகளால் வேலி அமைத்து, ஒழுங்குபடுத்தி, மாணவர்களே பராமரிக்கும் வகையில், செயல் திட்டம் உருவாக்கியிருந்தார்.
விடுப்பு ஆசிரியர் வகுப்புக்கு, வழக்கமாக அவர் பொறுப்பேற்பார். வளாகத்தில் ஒரு மரத்தடியில் அமர வைத்து பாடம் நடத்துவார். வகுப்பு, இயல்பாக, இயற்கையாக அமையும். செயல்முறையாக இருக்கும்.
காக்கை பறப்பதை பார்… வண்ணங்களை கவனி… கூர்ந்து நோக்கும் அலகை நோக்கு… என்ற பாணியில் பாடம் நடக்கும்.

மண்வெட்டியின், கைப்பிடி முனைக்கு, ‘வெப்புதாங்கி’ என்ற பெயர் இருப்பதை, உணர்த்தியது அவர்தான். ஒரு விவசாயின் மகனாக, வெட்கப்பட்ட தருணம் அது.
மொழி, சூழல், பண்பு, நடத்தை, அறிவியல், இயற்கை, இலக்கியம் என, சாதுார்யமாக தொட்டு செல்லும் அவரது வகுப்பு. உயர்ந்த விழுமியங்களை, மனசில் உணர்த்தி, நேரத்தை கலகலப்பாக கரைக்கும்.
ஒரு ஆசிரியர் தின நாள். 1987 என, நினைக்கிறேன். நல்லாசிரியர் விருது நிகழ்ச்சி, சென்னை, தியாராயநகர், சாரதா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. செய்தி சேகரிக்க, சென்றிருந்தேன்.
முன் வரிசையில், நிருபர்களுக்கான இடம். அதன் அருகே நின்று, இருக்கைகளை பார்த்துக் கொண்டே வந்தேன். ஒன்று கவனத்தில் நின்றது. அவர்தான்… உறுதிப்படுத்திக் கொள்ள, செய்தி குறிப்பை வாசித்தேன். பெயர் இருந்தது.
விருது வாங்கிக் கொண்டு, இறங்கி வந்தார். அவர் முன் விழுந்து வணங்கினேன். மொத்த நிகழ்வும் ஒரு கணம் நின்று, கவனம் எங்கள் மீது திரும்பியது. என்னை இறுக அணைத்துக் கொண்டார். பார்வையில், ‘யார் நீ…’ என்ற கேள்வி. கற்ற காலத்தை சொல்லி, அறிமுகப்படுத்திக் கொண்டேன்.
மிகவும் நெகிழ்ந்து, மகிழ்ந்தார்.
பின்னர், இருமுறை நாகர்கோவில், கிறிஸ்டோபர் நகரில் அவரது வீட்டில் சந்தித்து, உலாவலுடன் நீண்ட உரையாடல் நடத்தியுள்ளேன்.
ஆசிரியர் தினம் மட்டும் அல்ல… நேர்மை, ஒழுக்கம், நிர்வாகம் பற்றிய தகவல்களை பகிரும் போதெல்லாம், என் தலைமை ஆசிரியர் ஒய். ரெஜினால்டு டேவிஸ் அவர்களை மேற்கோள் காட்ட தவறியதில்லை.

பிரசவம் ரோட்டிலா… வீட்டிலா…

அது, 1996 என்று நினைக்கிறேன். வழக்கறிஞர் சரவணன் குடும்பத்துடன் அறிமுகம் கிடைத்திருந்தது. போலீஸ் செய்திகளை கவனிக்கும் பொறுப்பில் இருந்தேன். உயர் அதிகாரிகளின் கோபப்பார்வைக்கு உள்ளாகியிருந்தேன். பலருக்கு தீரா பகைமை.
என், ‘தகவல் மூலம்’ எல்லாம், அதிகாரிகள் வீட்டு அடுப்படியும், காரோட்டிகளும் தான். வீட்டுப்பணிப்பெண்ணுக்கு, தோசை சுட கரண்டியை கையுடன் பிடித்து அனுபவப் பாடம் எடுப்பது, ஒரே மாதிரி உடை அணிந்த மப்டி பெண் போலீஸ் சூழ, மன்னர் வேடத்தில் தியேட்டரில் ராஜாங்கம் நடத்துவது, என பல தினுசான அதிகாரிகளை பார்த்திருக்கிறேன். தகவல்கள் அவ்வப்போது, என் பேஜர் கருவியில் ஏறும். அவை, பெரிய செய்தியாவதும் உண்டு.
அது ஏப்ரல் மாதம். கொடும் வெயில். ஒரு முற்பகலில், கோடம்பாக்கம் போலீஸ்நிலையத்தில் ஒரு கர்ப்பிணி பெண்ணை கண்டேன். ஒரு போலீஸ்காரரிடம் விசாரித்தேன். ஆறுமாதமாக, நடையாய் நடப்பதாக சொன்னார். விவரம், விலாசம் பெற்று கொண்டேன்.
அன்று, பணியை முடித்துக்கொண்டு, இரவு, 8:00 மணி அளவில் வடபழனி கங்கையம்மன் கோவில் தெரு சந்தில் உள்ள அந்த வீட்டுக்கு சென்றேன்.
அது ஒரு பீகாரி குடும்பம். தந்தை சண்டை போட்டுக் கொண்டிருந்தார். கர்ப்பிணியை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. தந்தையின் குரல் இயலாமையாக வெளிப்பட்டது. சூழலை ஒருவாறு ஊகித்தபின், அறிமுகப்படுத்திக் கொண்டேன். அந்த ஏழைத் தந்தை, இயலாமையின் வலியை வெளிப்படுத்தினார். மகளுக்காக நீண்ட நாட்கள் அலைந்தும், நீதியின் ஆரம்ப கதவைக் கூட, எட்ட முடியாத ஏக்கம் வெளிப்பட்டது. அப்போதைய பிரதமரின் உறவினர் என்று அவ்வப்போது சொல்லி ஆறுதல் பட்டுக் கொண்டார். நீதி கேட்டு, பிரதமருக்கு எழுதிய கடிதங்கள் சிலவற்றையும் காட்டினார்.
எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டேன். கடிதங்கள், புகார்கள் என, நகல்கள் கேட்டு வாங்கினேன். கர்ப்பிணியிடம் நீண்ட பேட்டி ஒன்றை, மைக்ரோ நாடாவில் பதிவு செய்து விடை பெற்றேன். போலீசாரிடமும் சில விளக்கங்களை கேட்டு பெற்றேன்.
அதன் அடிப்படையில் ஒரு செய்தி தயாரித்தேன். பாலியல் பலாத்காரம் சார்ந்த தகவல் கொண்ட செய்தி. வழக்கமாக இது மாதிரி செய்திகளை, நிருபரின் பெயரில் வெளியிடுவதில்லை. எனக்கு உயர் நிலையில் இருந்தவருக்கு என்ன கோபம் என்று தெரியவில்லை. என் பெயரில் வெளியிட்டுவிட்டார்.
செய்தி இதுதான்…
பிரபல தமிழ் நடிகர் ஒருவர். கதாநாயகன், வில்லன் என்று கதா பாத்திரங்களில் நடிப்பவர். தமிழ் தேசியம் எல்லாம் பேசுவார். அலுவலகத்தில் வேலை செய்ய வந்த பீகாரி பெண்ணை, பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார். அதிகார மிடுக்குடன் நடிகர் வலம் வந்ததால், புகார் பதியாமல், அலைக்கழித்தனர். விரட்டியடித்தனர். அவர் பிரசவம், ரோட்டிலா… வீட்டிலா… என்ற நிலையில்தான், என் செய்தி வெளிவந்தது.
போனில் ஏகப்பட்ட மிரட்டல். பணம் வாங்கிக் கொண்டு, எதிராக செய்தி போட்டதாக… பணம் கேட்டு மிரட்டியதாக… பேரம் பேசியதாக… நடிகர் புகழை கெடுப்பதாக…
பொதுவாக, இவை வரும் என, எதிர்பார்ப்பதுதான். எனவே, செய்தியின் உயிர்ப்பு வாடிப்போகாமல் இருக்க தொடர் தாக்குதல் நடத்துவதை தவிர வேறு வழி இருக்காது. அதற்கும் தயாராக இருந்தேன். சம்பவத்தை நிரூபிக்கும் ஆவணங்களை தொடர் செய்தியாக்கினேன். துவக்கம் என்னிடம் என்றாலும், மற்ற இதழ் நிருபர்களும் அதன்பின் இணைந்தனர்.
அப்போது, எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. என்னிடம் பேரம்படியாததால், சம்பந்தப்பட்ட பெண்ணை அணுகிய நடிகர், பேரத்தையும் மிரட்டலையும் துவங்கினார். பெண் நிலை தடுமாறினார். ஏற்கனவே திருமணமானவர் நடிகர். அந்த பெண்ணையும் திருமணம் செய்வதாக சொல்ல, தடுமாற்றம், பூகம்பமாகிவிட்டது.
ஆவணங்களை உளவுபிரிவு உயர் அதிகாரி ஒருவரிடம் கொடுத்துவிட்டேன். அதன் அடிப்படையில், விசாரணை நடத்திய அப்போதைய தி.நகர் போலீ்ஸ் உதவி கமிஷனர் திரு. சந்திரசேகர் வழக்கு பதிய உத்தரவிட்டார். இவர், தி.மு.க., அமைச்சர் ஒருவரின் உறவினர்
நடிகர் பேரத்தால், இரண்டும் கெட்டானாகிவிட்டார், பெண். அந்த நேரத்தில் உதவிக்கு வந்தார், அறநிலையத்துறை அதிகாரி கவிதா. அவரது தீவிர முயற்சியால், பிரபல வழக்கறிஞர் பாதுகாப்பில் சில நாட்கள் பெண் இருந்தார். பின், மதிப்புக்குரிய ஜனநாயக மாதர் சங்கம், வழக்கு முடியும் வரை, அந்த பெண்ணை பராமரித்தது. அப்போதுதான், கவிதாவின் தீர்க்கத்தையும், அயராத முயற்சியையும் கண்டேன். அவர் மீது பெரும் மதிப்பு ஏற்பட்டது. அந்த மதிப்பு குலையாமல், குறையாமல் தொடர்கிறது.
சரி… வழக்குக்கு வருவோம். பெண்ணுக்கு, ஆண் குழந்தை பிறந்தது. அறிவியல் நிரூபணப்படி, வென்றார். நிவாரணம் கிடைத்தது. நடிகருக்கு தண்டனையும் கிடைத்தது. காலம் எல்லாவற்றையும் மாற்றிவிடும் தானே… நடிகரின் இரண்டாவது மனைவியாகிவிட்டார். தீவிர தமிழ் தேசியம் பேசும் நடிகர், விரைவில் புரட்சிகள் நடத்துவார்.

நொடியில் உயிர் பெறும் கோடுகள்

சென்னை, அண்ணாசாலை செய்திப்பிரிவில் பணியில் சேர்ந்த போது, வியப்புடன் பார்த்திருக்கிறேன். மாலையில்தான் வருவார். வரைவார். வியப்பை தருவார். வெள்ளை தாளில் கருப்பு மையால் உயிர் ஊட்டுவார். அந்த வியப்பு தமிழகத்தில் மறுநாள் பரவும். அந்த பொந்து பேனாவுக்கு தனித்துவம் உண்டு. அது சுழல்வது தனி அடையாளம். சுழற்சியின் நுட்பம் புலப்படாது. கோடுகள் போல் தோன்றும். நொடிப்பொழுதில் உயிர் பெறும். ரசிக்கும் பாமரத்தனம் மிக்கவை. சுய சிந்தனையை துண்டுபவை. மெல்லிய நகைச்சுவை ஊடாடுபவை.

சமூக நடத்தைகளை உள்வாங்கி, மிக நுட்பமாக வெளிப்படுத்துவார். இந்திய கார்டூன் உலகின் நாயகன். அவரது கோடுகளுக்கு இணை ஏதும் இல்லை. நீண்ட செய்தியை, சில கோடுகளில்… பெரும் பெகளத்தை, மெல்லிய வரிகளில் வெளிப்படுத்தி வியக்க வைப்பார்.

கடந்த, 2010 ல் ஓய்வு பெற்றார். கிட்டத்தட்ட, 22 ஆண்டுகள் பழக்கம். கடைசி சில ஆண்டுகளில், எங்கள் பணி மேஜைகள் அருகருகே அமைந்தன. பேசுவதற்கும், உலாவுவதற்கும் வாய்ப்புகள் கிடைத்தன. அவரது உரையாடலின் ஊடே, எளிய நகைச்சுவை படரும்.

பணியில் சேரும் முன்பே, அவரது கார்டூன்கள் எனக்கு பழக்கம். அவை உயிர் பெறுவதை, சொந்த ஊரில் காட்சியாக பார்த்திருக்கிறேன். அவரது உணர்வு, பாமரன் செயலில் வெளிப்பட்டது.

ஓய்வுக்கு பின், சில முறை அவரை சந்தித்துள்ளேன். அரசின் ஓய்வூதியம் பெறுவதற்கான முயற்சிகள் அவை. பெரிய அளவில் கைகூட வில்லை.

பின்னர், சொந்த ஊரான கேரள மாநிலம், கோட்டயம் சென்றுவிட்டார். அங்கும் வரைந்தார்… வரைகிறார்… வரைவார்… நீண்ட நாட்களுக்கு பின், சென்னை வந்தார். ஒரு மாலை சந்திப்பு. ஒரு சிறு மழையின் நடுவே நீண்ட உரையாடல். அன்பின் வெளிப்படுத்தல். விடைபெறும் போது சொன்னார்…

‘அமுதன்… ஆயில் பெயிண்டிங் வரைய படிச்சிட்டு இருக்கேன். வாரத்துக்கு நாலு வகுப்பு. புதிய துறை…   ஆர்வமா இருக்கு…’

கார்டூனிஸ்ட்  E.P. பீட்டர்

போதையில் கிருஷ்ணர் வளர்ச்சியில் காந்தி

அப்போது சத்திய சோதனையை அறியேன்.  ‘காந்தி தாத்தா நம் தாத்தா…’ என்று துவங்கும் அழ.வள்ளியப்பாவின் பாடல் வகுப்பறையில் அறிந்தது.  அம்மாவும் கொஞ்சம் உரு ஏற்றிவிடுவார். அவ்வப்போது வாயில் உருண்டு இம்சை படும். வீட்டில் முன் அறை தெற்கு சுவரில், வரிசையாக  நான்கு போட்டோக்கள். நடுவில் காந்தி படம். கொஞ்சம் பெரிதானது.  ஓவியர் திருவடியின் கைவண்ணத்தில்… உறுதியான காப்பு சட்டகத்துக்குள் அடைத்தது. எப்போதும், காந்தி குளிருக்கு போர்த்திக் கொண்டிருப்பது போல் தோன்றும். அப்பாவுக்கு அந்த காந்தியை மிகவும் பிடிக்கும்.

அந்த வரிசை படங்களின் முகத்தில்தான் தினமும் விழிப்பேன். அறுவடை காலங்களில், அந்த அறையை நெல் நிறைத்து விடும். அதன் மேல்தான் இரவில் படுத்திருப்பேன். அப்போது, காந்திக்கு அருகே இருப்பது போல் தோன்றும். நுாலாம் படை படிந்த  படக்கண்ணாடிகளை, அந்தநாட்களில் துடைத்து விடுவேன். மெனக்கெட்டு மேலே ஏற வேண்டிய அவசியம் இல்லை பாருங்கள்.

அது, 1968 ம் ஆண்டு என்று நினைவு . காமராஜர் எங்கள் ஊருக்கு வந்திருந்தார். என், எட்டேமுக்கால் செண்ட் நில இயற்கை மரத் தோட்டம், அப்போது தரிசாக கிடந்தது. சில தென்னை மரங்கள், ஒரு புளி, பூவரசு மரங்கள் மட்டும்  நின்றன. அது ஊரில் முகப்பில் உள்ளதால் அங்குதான் பொதுக்கூட்டம். அப்போது, காமராஜர் ஒரு கதர் நுால் மாலையை என் அப்பாவுக்கு போட்டதாக  ஊரில் சொல்வர். அப்பா சொன்னதில்லை. அந்த மாலை, காந்திப்படத்துக்கு அணிவிக்கப்பட்டிருந்தது.

மயிலாடி ரிங்கல்தவுபே உயர்நிலைப்பள்ளியில், 7 ம் வகுப்பு சேர்ந்திருந்தேன்.  போட்டிகள் அறிவித்தனர். பொதுவாக, என் நிறத்தை முன்நிறுத்தி, எந்த நிகழ்வுகளிலும் ஆசிரியர்கள் சேர்க்க மாட்டர். வலுக்கட்டாயமாக சேர்ந்தாலும் இம்சைதான் படுவேன். புறக்கணிப்புகளை மீற வேண்டும் என்ற வெறி மனதில் கனன்று கொண்டிருந்தது.  அறிவிப்பு வந்த போது, மாறுவேட போட்டிக்கு பெயர் கொடுத்து விட்டேன்.

ஒரு வெறியில் கொடுத்தேனே தவிர, எப்படி நிறைவேற்றுவது. உரிய தளவாட கருவிகள் உண்டா… என்ன வேஷம் போடுவது… இப்படி எல்லாம் சிந்தனை அலைக்கழிக்க  ஒன்றும் புரியவில்லை.  மறுநாள் வகுப்பறையில் ஒரு ஆசிரியர், ‘லே… நீ என்ன வேஷம் போடப்போற…’ என்றார். பயத்தில் கலங்கிய கண்ணுடன் யோசித்தேன். ‘செணம் சொல்லுல…’ என்று அவசரப்படுத்தினார்.

மனதில் சித்திரங்கள் வந்து போயின. மாறி மாறி ஒரு படம் வந்தது. சொல்லிவிட்டேன். அப்பாவுக்கு பிடித்த  திருவடியின் ‘காந்தி…’

வகுப்றையில் ஒரே எள்ளல். நவிச்சியத்துடன் ஏளனமாக சிரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். ‘காந்தியாமில்ல… அவரு ஒன்னப்போலயா கருப்பு. போல… ஒழுங்கா போயி நாலு மாட்ட மேய்ச்சி பொழைக்கிற வழிய பாருல…’ ஆசிரியரின் எள்ளலுடன் வகுப்பறையில் எனக்கு எதிராக குரல்கள் நிறைந்தன.

எதுவும் சொல்லாமல், பார்த்துக் கொண்டிருந்தேன். மனசில் மருந்துவாழ்மலையும், காந்திபடமும் வந்து போயின. ‘எனக்குத்தாம்ல மொத பிரேசு… பாருங்க…’ மனதில் சொல்லிக் கொண்டேன்.

பள்ளியில் இருந்து என் ஊர், 4 கி.மீ., துாரத்தில் உள்ளது. இருவேளை, 8 கி.மீ., நடக்க வேண்டும். அன்று வீட்டுக்கு புறப்பட்ட போது, காந்தியை மீண்டும் மனதில் பதித்தேன். காந்தியாவதற்கு தேவையான கருவிகளை பட்டியலிட்டபடி நடந்தேன்.

அகன்று உருண்ட மூக்கு கண்ணாடி, ஊன்று கோல், உடலை மறைத்து மூடிக் கொள்ள துண்டு, உடுத்த இடுப்பு துண்டு,  அணிய செருப்பு. நுாற்க ஒரு ராட்டை, ஒட்டிக் கொள்ள வெள்ளை மீசை. தலையை வழுக்கையாக்க… இவற்றுக்கு என்ன செய்வது… சிந்தித்துக் கொண்டே நடந்தேன்.

வீட்டை சேரும் முன் சிறு துலக்கம் ஏற்பட்டது. உடுத்தவும் போர்த்தவும் அப்பாவின் பழைய வேட்டியை பயன்படுத்தலாம். வட்ட பிரேம் போட்ட கண்ணாடி அணிபவர் உண்டா என்று யோசித்தேன். வேதக்கோயில் விளை சொக்கலிங்கம் தாத்தா நினைவுக்கு வந்தார். ராட்டைக்கு… நுால் நுாற்கும் பேபி அக்காவும், பவுஸ் அக்காவும் நினைவுக்கு வந்தனர். செருப்பு கண்டிப்பாக கிடைக்காது. ஊரில் யாரிடமும் இல்லை.

மீசைக்கு… வழியில் எருக்கம் செடியில் காய் முற்றி வெடித்து விதை பரவுவதைப் பா்த்தேன். அதை சேகரித்துக் கொண்டேன். ஓட்டை கண்ணாடி பிரேம் கிடைத்தது. அப்பாவின் வேட்டி துண்டுகளும் கிடைத்தன. ஒதுக்கிப் போட்ட உழவு கம்பு ஒன்றை ஊன்றுகோலாக எடுத்துக் கொண்டேன்.

ராட்டைக்காக ஓடினேன். முதுகில் இரண்டு சாத்து வைத்து. ‘ போல அந்தால… காந்தியாமில்ல காந்தி… இவுரு புடுங்கிருவாரு…’ என்று விரட்டியடித்தனர். சரி பாதகமில்லை. இருப்பதை வைத்து சமாளித்துவிடலாம் என்று திருப்திப்பட்டுக் கொண்டேன்.

அன்று இரவே, ஓர் ஒத்திகை பார்த்தேன். கொஞ்சம் திருப்தி வந்தது. கருவிகளை பத்திரப்படுத்திக் கொண்டேன். மறுநாள், காலையில் விவசாயப் பணியைத் தொடர்ந்து பள்ளிக்கு ஓடினேன். மாலையில் வீடு திரும்பியதும் மீண்டும் ஒருமுறை ஒத்திகை. விட்டுப்போன கருவிகளை யாரிடமாவது பெறமுடியுமா… என்று சிந்தித்தேன். இரவெல்லாம் காந்தியை பார்த்துக் கொண்டிருந்தேன். ஒப்பனை செய்தபின், ‘உங்களைப் போல இருக்கிறேனா…’ என்று திருவடியின் காந்தியைக் கேட்டுக் கொண்டேன். அந்த புன்னகை பிடித்திருந்தது.

போட்டி நாள் வந்தது. பெயர் கொடுத்திருந்தவர்களை அழைத்தனர். ஒரு வகுப்பறைக்குள் போட்டு பூட்டினர். மாதச் சம்பள குடும்பத்து மாணவ மாணவியர் ஒப்பனை செய்ய உதவியாக பலர் வந்திருந்தனர்.

நான், மூன்றே நிமிடங்களில் காந்தியாகி விட்டேன். என் அருகில்  அண்ணன் குமரேசன். மருங்கூர் அருகே சிறிய கிராமத்தை சேர்ந்தவர். ராஜா வேடம் போட்டிருந்தார். அவரும் சீக்கிரமே தயாராகிவிட்டார். நீண்ட ஒப்பனையிலும் சிலர் திருப்தி படவில்லை. உதவிக்கு வந்தவர்கள், ஒப்பனையை மாற்றிக் கொண்டே இருந்தனர். அதைப் பார்த்து சலிப்புடன் நின்று கொண்டிருந்தேன். ஏக்கமாகவும் இருந்தது.

என் நண்பன், பிரான்சிஸ் கிறிஸ்டோபர் என்ற ரவி. மயிலாடி பஞ்சாயத்து நிர்வாக அலவலரின் மகன். கிருஷ்ணர் வேடம் போட்டான். அவனுக்கு ஒப்பனை செய்துவிட, ஐந்து பேர் வந்திருந்தனர்.  ஒப்பனை செய்ய திரண்டிருந்தவர்கள், என்னை பார்த்து எள்ளல் செய்வதை புரிந்து கொண்டேன். பரிசு கிடைக்காது என்ற மனநிலை வந்துவிட்டது ஆனாலும், தொட்டதை முடிக்கும் உறுதி திடமாக இருந்தது.

போட்டி ஆரம்பமானது. முதலில் ராஜா. பள்ளி வளாகத்தில் சதுர வடிவ பாதையில் சுற்றி வந்தார்.  அவர் செல்வதை பார்த்துக் கொண்டிருந்தேன். அடுத்த சுற்று யாருக்கு… கதவருகே நின்ற வாத்தியார், ‘லே… காந்தி நீ போ…’ என்று விரட்டிவிட்டார்.  கம்பு ஊன்றியபடி, வளாகத்தை, புன்னகை பூக்க முயன்று வலம் வந்தேன். அவ்வப்போது, கண்ணாடியை சரி செய்து கொண்டேன். ஒட்டு மீசை விழாதவாறு மேல் உதட்டை நிமிட்டி கவனித்துக் கொண்டேன். ஒரே ஆர்ப்பரிப்பு. ‘லே… காந்தி… காந்தி… வாரம்லே…’  என்று மாணவர்கள் ஆர்ப்பரித்தனர். என் சுற்று முடிந்ததும், அறைக்குள் சென்று, ஒப்பனையை விலக்கினேன். ஒப்புக் கொண்டதை முடித்து விட்டேன்.

போட்டி முடிவு வந்தது. பரிசளிப்பு நடந்தது. கிருஷ்ணர் முதல் பரிசு பெற்றார். காந்தியின் பெயர் ஆறுதல் பரிசுக்கு கூட தேர்வு செய்யப்படவில்லை. கூட்டத்தின் கடைக் கோடியில் நின்ற நான், மருந்துவாழ்மலையைப் பார்த்துக் கொண்டே நடந்தேன்.

ஆனால், பள்ளிக்கு வந்து போகும், போது,  பொது இடங்களில்… ஏதோ சில குரல்கள், ‘காந்தி வாராம்லே…’ என்று சுட்டின. காந்தி பாதிப்பில் பல நாட்கள்  சுட்டுதல் நீடித்தது. அது உவப்பாக இருந்தாலும், வெறுமை கனன்று கொண்டே இருந்தது.

என் மகளுக்கு அப்போது, 7 வயது.  காந்தி பிறந்தநாள் அன்று அதிகாலை, கிண்டி, காந்திமண்டபத்துக்கு,  அழைத்து போனேன். அங்கிருந்த சிலையை பார்த்து, வீட்டுக்கு வந்ததும் ஒரு படம் வரைந்தாள். அதை பொக்கிஷமாக வைத்திருக்கிறேன். அப்பாவின் காந்தியை விட, மகளின் காந்தி பிடித்தமாகிவிட்டார்.

இப்போது, கிருஷ்ணர் போதையில் உழல்கிறார். காந்தி, பல ஆயிரக்கணக்கான வளர்ச்சி செய்திகள் எழுதிக் கொண்டிருக்கிறார்.

தொல்லியல் நிலமும் மடுவிளை கனவும்

அதை, மடுவிளை என்பர். மதுவிளை என்போரும் உண்டு. கன்னியாகுமரி மாவட்டம், மருந்துவாழ்மலையின் வடக்கு  மடியில் உள்ளது. பருவ மழை பெய்யும் போது, மலையின் முதுகில் விழும் துளிகள், சேர்ந்து பெருகி, ‘பண்ணிப்பொட’ என்ற பகுதி வழியாக, ஆர்ப்பரித்து திரண்டு பாய்ந்து, மடுவிளை நிலப்பரப்பை அரித்து ஓடும். மண் அரிப்பால், மடுவிளையில் பெரிய ஓடை உருவாகியிருந்தது. திரண்டு சாடும் வெள்ளம், மருந்துவாழ்மலை பாசனக் கிளைக்கால்வாயின் கீழ்மடை வழியாக ஒடுங்கி சாடி, பெரும் ஓடையாகி, ஒருமைல் மேற்கில் நாஞ்சில் புத்தனாற்றில் விழும்.

அப்போது, மடுவிளையிலும் அதை சுற்றியும் குடைமரங்கள் நிறைந்திருந்தன. வாகைகளும் உண்டு. அவற்றில் பொன்வண்டுகள் ஒளிரும். மழைநீர் அறுத்து ஓடிய உடைந்த நில சரிவில்,  பொந்துகளில், ஆந்தை, கூகை, பனங்காடை, மீன்கொத்தி, தவிட்டு புறா என பறவைகள் வசிக்கும். கானாங்குருவிகள் கனன்று திரியும். கருங்குருவிகள், காக்கைகளை துரத்தும், நாகணவாய்கள் நவிங்கித் திரியும். வாலாட்டிகள் வழியறிந்து, சிறுபூச்சி புதர்களுக்குள் குடியிருக்கும்.

என் பள்ளிப் பருவத்தில் அங்கு அதிகம் போவேன். எங்களுக்கும்,  அந்த பகுதியில் மலை அடிவாரத்தை ஓட்டி கொஞ்சம் நிலம் உண்டு. அதை, மலைக்கரை விளை என்போம். வழக்கமாக, நன்செய் சாகுபடி பணிகளுக்குப்பின்,   ஆவணி மாதத்தில், புன்செய் பணிகள் துவங்கும். அந்த காட்டு நிலத்தில், காணம், சிறுபயிறு, உளுந்து, எள்ளு என்று மாறி மாறி விதைப்பு நடக்கும்.

பரப்பில் முள் புதர்கள் நிறைந்து கிடக்கும். விதைப்பு பணி நாட்களில் அங்கேயே உளுந்தங்கஞ்சி காய்ச்சுவர். மதியம், பனம் பட்டையில் ஆவிபறக்கும் உளுந்தங் கஞ்சியை ஊற்றி, காணத்துவையலை தொடுகறியாக்கி குடித்து மகிழ்வோம்.

அங்கு, பிரண்டைக் கொடிகள் நீண்டு கிடக்கும். துாதுவளை, மட்டைக் கள்ளிகளுக்குள் ஒளிந்து படர்ந்திருக்கும். குற்று முள் செடிகள் படர்ந்திருக்கும். விடைதலை மரங்கள், குற்றி படர்ந்திரக்கும். முசுட்டைக் கொடிகள் திருகி சிரிக்கும். அதன் இலைகளை சுவைத்து மகிழ்வோம். அவற்றின் ஊடே, காட்டு முயல்களுக்கு கண்ணி வைத்து காத்திருப்பர். ஓணான்கள் அதன் மீது, நடந்து போகும். மலை உ:டும்புகள், இடுங்காமல் திரியும்.

மடுவிளையை, எப்போதும் வியப்புடன் பார்ப்பேன். அதன் பரப்பு முழுவதும், உடைந்த மண்பாண்ட சில்லுகள் சிதறிக்கிடக்கும். அவற்றை சேகரித்து திரிவேன். ஊர் பெரியவர்கள், ‘ ஓட்ட காலனத் தொடாதே மக்கா…’ என்று அதட்டி விரட்டுவர். அவ்வப்போது அந்த பகுதிக்குள் தனிமையில் சுற்றிவந்து, ஈர்ப்பை புதுப்பித்துக் கொள்வேன். அந்த ஓடுகள் நிலையை கவனித்துக்கொண்டே நடப்பேன். ஒரு காரணமும் தெரியாது. முதியவர்கள் பார்த்தால், அதட்டி விரட்டுவர்.

ஒருமுறை, மண் சிற்பத்தில் உடைந்த தலை ஒன்று கிடைத்தது. அதை எடுத்து வந்த போது, முதியவர் ஒருவர் அதட்டி, பிடுங்கி எறிந்துவி்ட்டார்.

உடைந்த மண் சில்லுகள் பற்றி, ஆலடிவிளை ஊரில் வாய்மொழி கதை உண்டு.  ஊர் உருவாகும் முன், மலை அடிவாரப் பகுதியில் குயவர்கள் வசித்தனராம். அவர்கள், மயிலாடி, வம்பவிளை அருகே நாராயிணி குளத்தில் மண் எடுத்து, பாண்டங்கள் வனைந்தனராம். அந்த பாண்டங்கள், எளிதில் உடையாத தன்மையுடன் இருந்தனவாம். மண் பாத்திரங்கள் உடையாவி்ட்டால், பிழைப்பு நடத்தவது அரிது என்று எண்ணி, இடம் பெயர்ந்து விட்டனராம்.

இந்த கதையின் மூலத்தை அறியேன். நாகர்கோவில் இந்து கல்லுாரியில் பேராசிரியராக இருந்த திரு. ராமச்சந்திரன் அவர்களிடம், நான் கல்லுாரியில் சேர்ந்த போது, இது பற்றி கூறினேன். அவர் சில மாணவர்களுடன், மடுவிளையை ஆய்வு செய்தார். அதில் அவர் கண்டறிந்தது என்ன என்று தெரியவில்லை. ஒருமுறை அது பற்றி விசாரிக்க போயிருந்தபோது, நோய்வாய்ப்பட்டிருந்தார். தொடரமுடியவில்லை.

மடுவிளை ஒரு முக்கியமான, தொல்லியல் தளமாக இருந்திருக்கலாம். முறைப்படி ஆய்வு செய்திருந்தால், வாழ்வியல் பற்றியும், வரலாறு பற்றியும் முக்கிய தகவல்கள் கிடைத்திருக்கலாம்.

நான், சென்னை வரும் முன்பே, மடுவிளை சிதைந்துவிட்டது. அதன் பரப்பை  புரட்டிப் போட்டு வேலிக்குள் அடைத்துவிட்டனர். அதன் உரிமையும் பல கைகளுக்கு மாறிவிட்டது.  இப்போது, அது மற்றொன்றாகி விட்டது. நுழைவதும் அரிது. மலையில் விழும் மழை நீரை, முறைப்படுத்தி ஒடுக்கி விட்டனர். பறவைகளுக்கு பொந்துகள் இல்லை. அது விளை நிலமாக்கப்பட்டுவிட்டது. அதன் வரலாறு மண்ணில் புதைந்து அழிந்து விட்டது.

மலைக் கரையில் என், 65.05 செண்ட் நிலப்பரப்பையும் விற்கும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளேன். அந்த பரப்பு பற்றி  பெரும் கனவு இருந்தது. அது, கடந்து போய்கொண்டிருக்கிறது.

அவருடன் பழக்கம் எதுவும் இல்லை

அது, 1989. துல்லியமாக நினைவில் இல்லை. சென்னை செய்திப்பிரிவில் பணியாற்றிவந்தேன். நாளிதழ்களில் ஒரு செய்தி ஒரு வாரமாக பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்தது. ‘ஒரு பக்தர் வீட்டு லிங்கத்தில் பொங்கி வழியும் தண்ணீர்’ பற்றி நுணுக்கமாக ஆராய்ந்து செய்தியை வெளியிட்டு வந்தன. பெரும் பக்தர் கூட்டம். ஆட்சித் தலைவர், வருவாய்த்துறை அதிகாரிகள், உயர் போலீஸ் அதிகாரிகள் என, அதிகார மிக்க பக்தர் கூட்டம் வரிசையில் வர, சாமானியர்களை கேட்கவா வேண்டும். பெரும் போக்குவரத்து நெரிசல்.

பொதுவாக, இந்த நிகழ்வுகளை கட்டமைப்பவர்கள், உயர்அதிகாரிகளுடன், நிருபர்களையும் வளைத்துப் போடுவர்.

நான் பணியாற்றிய இதழில் அந்த செய்தி தொடர் வரவில்லை. அப்போது தாம்பரம் நிருபராக இருந்த அகஸ்டின், சிந்திக்கத் தெரிந்தவர். அவரை வளைக்கும் முயற்சி தோல்வியுறவே, தலைமை அலுவலகத்துடன், தொடர்பு கொண்டார் ஒருவர். அந்த தொலைபேசி அழைப்பை சந்தித்தவன் நான். விவரங்களை வாங்கிக் கொண்டேன். அதிகாரிகளை துணைக்கழைத்து மேற்கொள்காட்டி, கண்டிப்பாக செய்தி போட கேட்டுக் கொண்டார்.

சரி… லிங்கம் தண்ணீர் விடுவதை பார்த்தால், செய்தி எழுதுவதாக உறுதி சொன்னேன். ஒப்புக் கொண்டார்.

அவரது மன்றாட்டை, ஆசிரியர் பார்வைக்கு கொண்டு போனேன். விசாரித்து எழுத சொன்னார். அன்று இரவு, தாம்பரத்துக்கு சென்றேன். அகஸ்டினையும் அழைத்துக் கொண்டேன். லிங்கத்தை பார்க்க போனோம்.

போனதும் புரிந்தது பிழைப்புக்கான பசப்பு. பிழைக்க வழியில்லாமலோ, தெரியாமலோ நடக்கும் அவச் செயல். தோண்டி துருவி விசாரித்தால் ஆனுதாபம்தான் மிஞ்சும். அவர்களின் புத்திசாலி தனம் வியப்பை தரும்

எங்களுக்கு ஏகப்பட்ட வரவேற்பு.  லிங்கம் தண்ணீர் கொட்டும் கதையை விளக்கினர். என், மதநம்பிக்கை பற்றிய விசாரணையும் முடிந்தது. ஒரு சிறிய வீட்டின்  உள்ளறையில், லிங்கம் இருந்தது. அருகே போனதும், கண்ணாமூச்சு விளையாட்டு மாதிரி, ‘அதோ தாண்ணி… இதோ தண்ணி… வியர்க்கிறது பாருங்கள்…’ என்று, கும்பல் அரற்றி அடித்து விட்டுக் கொண்டே இருந்தது. பேசாமல் நின்றேன். நேரம் நகர்ந்தது. மீண்டும், ‘அதோ ஊற்று… இதோ ஊற்று…’ என்றனர்.

‘சரி… உறட்டும்… சென்னையில குடி தண்ணீர் பிரச்னையாவது தீருமே… அமைதியா இருங்க…  பெருகட்டும்’ என்றேன், சிரிக்காமல்.

இதற்கிடையில், ‘பூசை நடத்த வேண்டும்’ என்றனர். என் முன்னிலையில் நடத்த சொன்னேன். கதவை மூடி மறைவாகத்தான் பூசை என்றனர். நான் லேசாக சிரித்தேன். நிகழ்வின் முக்கியஸ்தர் என் அருகே வந்தார். காதில், ‘நாங்க குடும்பத்தோட கிணத்துல குதிச்சி தற்கொலை பண்ணிக்கப் போறோம்… ’ என்றார். நான் சிரித்த படி, ‘ கொஞ்சம் பொறுங்க… போட்டோ கிராபரை கூப்பிட்டுக்கிறேன்.  கிணத்துல பாயுறத படம் எடுக்க வேண்டாமா…’ என்றேன்.

நிகழ்வை திட்டமிட்டவர்களுக்கு வியர்க்க துவங்கியது. நான் வேளியேறினேன். அகஸ்டின் சிரித்துக் கொண்டு நின்றார். வெளியே கூடியிருந்த பக்தர்களிடம் விவரங்களை அவர் கறந்திருந்தார். தகவல்களை ஒருங்கிணைத்து, ஒரு செய்தி எழுதினோம். மறுநாள் காலை இதழில் வெளியானது. பக்தர் வரிசையில் நின்ற அதிகாரிகள் இப்போது, விலங்குடன் நின்றனர்.

எங்கள் செய்தி வெளியானதற்கு மறுநாள், முரசொலி இதழில், ஒரு பக்க கட்டுரை ஒன்று. அப்போதைய முதல்வர் கருணாநிதி எழுதியிருந்தார். அந்த கட்டுரை, எங்கள் செயலையும், நாங்கள் தயாரித்த செய்தியையும் மையமாக கொண்டிருந்தது. அவருடன் எனக்கு நேரடி பழக்கம் எதுவும் இல்லை.அவருடன் நேரடி பழக்கம் இல்லை