Design a site like this with WordPress.com
தொடங்கவும்

நீங்கதான் செத்துப்போயிட்டீங்களே…

அனேகமாக, 1998 ம் ஆண்டாக இருக்கலாம். சென்னை அண்ணாசாலையில் எங்கள் அலுவலகத்துக்கு எழுத்தாளர் சுந்தரராமசாமி வந்திருந்தார். ஆசிரியருடனான சந்திப்பு முடிந்தபின் அவரை வழி அனுப்ப வெளியே வந்தோம். அங்கே ஒரு ஆட்டோ காத்திருந்தது. ‛இவர்தான் சிவதாணு, நல்ல வாசகர்’ என்று அறிமுகப்படுத்தினா் சுரா. கூடவே, ‛சென்னைக்கு எப்போது வந்தாலும், இவரது ஆட்டோவில்தான் பயணம்’ என்றார். ‛நானும் நாவுரோல்தான்’ என்று அறிமுகப்படுத்திக்கொண்டார் அவர். 

நாகர்கோவிலைத்தான் அப்படி குறிப்பிட்டார். பேரிக்காய் வடிவில் முகம். தளர்வுடன் கொஞ்சம் சடவும் தெரிந்தது. வாழ்வதற்கு கடுமையாக போராடுகிறார் என, புரிந்து கொண்டேன் . அதிகமாக பேசிக்கொள்ளவி்ல்லை.

பின்னர், அவ்வப்போது சென்னை இலக்கிய கூட்டங்களில் பார்த்துக்கொள்வோம். மறக்க முடியாத முகம். ஒருமுறை, ‛‛நான் மயிலாடியிலதான் பொண்ணு கட்டியிருக்கேன்; ஒங்களுக்கு அங்கதானே,’’ என்றார். கொஞ்சம் பேச்சு நீண்டது. 

அவரது மைத்துனர், மயிலாடி ரிங்கல்தெளபே உயர்நிலைப் பள்ளியில் என்னுடன் ஒரே வகுப்பில் படித்தவர். பேச்சு நீண்டபோது, கொஞ்சம் காரசாரம் கூடியது. வழக்கமாக மனைவியின் உடன் பிறந்தோரை வசவும், ‛நாவுரோல்’ மனநிலை கரை புரண்டது. வாழ்வதற்கு நடத்தும் போராட்டத்தில், இந்த வசவு ஒலிபரப்பு அவருக்கு கொஞ்சம் ஆறுதலைக் கொடுத்திருக்கலாம். அவரது மைத்துனரை, எனக்கு தெரியும் என்பதால், என் வழி அவரது வலி, அவருக்கு போகும் என்பதாகவும் இருக்கலாம். 

கடும் போராட்ட நெருக்கடியை பகிர்வதன் மூலம், என் முகம் அவருக்கு நம்பிக்கை அளித்திருக்கலாம்.

 பாலுமகேந்திரா உட்பட சில சினிமாக்காரர்கள் பெயர்களை அவ்வப்போது சொல்லி, அவர்கள் விரைவில் தரப்போகும் வேலை மூலம் குடும்ப தேவையை பூர்த்தி செய்து கொள்ளப்போவதாக நம்பிக்கையுடன் கூறுவார்.

ஒருநாள் அதிகாலை, தரைவழியில் தொலை பேசினார். அப்போது, அசோக்நகர், ராகவன் காலனி, முரளி ஆனந்த் அபார்ட்மெண்ட் மூன்றாம் தளத்தில் வசித்துவந்தேன். அவசரமாக ஒரு உதவி கேட்டார். வீட்டு முகவரியை குறிப்பிட்டு அழைத்தேன். காலை, 9:00 மணி வாக்கில் வந்தார். என் மகனுக்கு அப்போது வயது 3, பள்ளி செல்ல புறப்பட்டு வாகன வரவை எதிர்பார்த்து மாடியில் இருந்து அவ்வப்போது எட்டி பார்த்துக் கொண்டிருந்தான்.

மாடிஏறிவந்து கொண்டிருந்த சிவதாணுவை பார்த்தும், ‛நீங்கதான் செத்துபோயிட்டீங்களே’ என்றான்.

எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அவர் அவனை அள்ளி அணைத்து, ‛டிவி’ ல பார்த்தியா மக்கா’ என்றார். அவன் தலையசைத்தான். பொதுவாக, வீட்டில் செய்தி தவிர, வேறு எந்த நிகழ்ச்சியையும் யாரும் பார்ப்பதில்லை. விசாரித்ததில், பக்கத்து வீட்டில் விளையாடும் போது, ‛டிவி’ தொடரை பார்த்த நினைவில் அப்படி வெளிப்படித்தியுள்ளான். 

அதன்பின் எப்போது பேசினாலும், அந்த அனுபவத்தைபகிர்ந்து கொண்டு அவனை விசாரிப்பார். அதன் பின் பல முறை சந்தித்துள்ளோம். ஒருமுறை, தி.நகர் கண்ணதாசன் சிலை அருகே சிக்னலுக்காக காத்திருந்தேன். ரோகினி லாட்ஜ் பக்கம், அவர் போய்க்கொண்டிருந்தார். அழைத்தேன். குரல் கேட்டு வந்தார். பைக்கை ஓரம் கட்டி பேசினோம். கையைப் பிடித்துக் கொண்டு நலம் விசாரித்தார். ‛‛ஒங்களைப் போல சிலர்தான் கூப்பிட்டு பேசிறீங்க… பலர் பார்த்தும் பார்க்காத மாதிரி போயிடுறாங்க… பார்த்து கூப்பிட்டாலும் அப்புறம் பார்க்கலாம் என்று பறந்துடுறாங்க,’’ என்றார். இந்தமுறை, மிகவும் அமைதியாக காணப்பட்டார். திருப்தியாக இருப்பதாக கூறினார். மகன்கள் படித்து பொருள் ஈட்டுவதாக கூறினார். ‛‛இனி நல்லா வாசிக்கலாம் பாருங்க,’’ என்றார்.

கடைசியாக, பார்த்து, ஆறு மாதங்கள் இருக்கலாம். பத்திரிகையாளர் நண்பர் ரமேஷ்வைத்யாவுக்கு நினைவு இருக்கலாம். அவரைக் காண, எங்கள் ஓயிட்ஸ் ரோடு அலுவலகத்துக்கு வந்திருந்தார். சந்திப்பின் போது என்னை விசாரித்திருக்கிறார். விவரம் எனக்கு தெரியவர, அவரை சென்று சந்தித்தேன். பணி இடைவெளியில் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.அகநாழிகை பொன் வாசுதேவனும் உடன் இருந்தார். அதுவே அவரை சந்தித்த கடைசி தருணம். 

எல்லா இன்னல்களுக்கு இடையேயும் வாழ்வை வாசிப்புக்கு அர்ப்பணித்த அந்த வினோத முகத்தை மறக்க முடியவில்லை. அவர் மறைந்து விட்ட செய்தி நம்பக் கூடியதாக இல்லை. என் மகன் சொன்னது போல…

காதலில் கனியும் நீர்காகம்

சமீபத்தில், கன்னியாகுமரியை அடுத்த, சசீந்திரம் போக வேண்டிய வேலை இருந்தது. அப்போது, தாணுமாலையன் கோவில் தெப்பக் குளத்தில், நீர்காகம் பறவைகளை கண்டேன். ஒரு அவசர பணியில் இருந்த போதும், நிதானமாக நோக்க மனம் லயித்தது. விலக மனம் வரவில்லை. தோதாக, சிறு மழை வேறு…
கவனித்ததில் காதல் வயப்பட்டு, நீரில் ஆடிய நீர் காகங்கள் தனி அழகை கொடுத்தன. அதை வர்ணிக்க சொற்கள் இல்லை.
இரண்டு மாதங்களுக்கு முன், காஞ்சிபுரம் மாவட்டம், கிழக்கு கடற்கரை சாலையில், முதலியார்குப்பம் பகுதியில் படகு சவாரி சென்ற போது,  நீர்காகங்களை ஒரு மரத்தில் பார்த்தேன். அருகில் சென்று நோக்க முடியவில்லை.
சுசீந்திரம், பழையாற்றில் மீனை தின்றுவிட்டு, உட்பாறைகளில் இறகை காயவைத்துக் கொண்டிருக்கும் நீர்காகங்களை, பஸ் பயணங்களில் கண்டிருக்கிறேன். அவற்றின் எச்சம், வெள்ளை நிறத்தில் பாறைகளில் படிந்து கிடக்கும். கறுப்பு நிறத்தில் அதன் மேல் அவை அமர்ந்திருக்கும்.
அவற்றின் இயல்பை உற்று நோக்க வாய்ப்பு கிடைத்தது.
நீர்காகங்கள், நீர் நிலைகளில் வாழும்.
மீன் கொத்தி, கொக்கு, நாரை போன்றவை வானில் பறந்த படி, நீர் நிலையின் மேற்பரப்பை ஆராய்ந்து, பாய்ந்து மீன்களைக் கொத்திப் பிடிக்கும்.
ஆனால் நீர்காகங்கள், நீர் நிலைகளில் தலையை மட்டும் வெளியே நீட்டி நீந்திக் கொண்டிருக்கும். அவ்வப்போது, நீருக்குள் அமிழ்ந்து எதிர்படும் மீனைப் பிடிக்கும்.
உடலை நீருக்குள் வைத்து நீந்தும்.
நீரில் மீனைப் பிடித்த உடன், கழுத்தை மட்டும் வெளியே நீட்டி, மீன் தலை, முதலில் வாயக்குள் செல்லும்படி தூக்கிப் போட்டு பிடித்து விழுங்கும். இந்த காட்சி அபூர்வமானது.
நீர்காக சிறகுகளில் எண்ணைப் பசை இல்லாதலால் தண்ணீர் சுலபமாக ஒட்டும். வயிறு முட்ட மீன் தின்ற பின் பறக்க வேண்டுமே? சிறகுகள் நனைந்திருந்தால் சிரமத்துடன் மெல்லப் பறந்து, அருகில் கல் மீதோ, மரக்கிளையிலோ அமர்ந்து, சிறகுகளை உலர வைத்துக் கொள்ளும். உலர்ந்த பின் பறந்து செல்லும். அவை, சிறகை விரித்துக் கொண்டு காற்றில் அல்லாடும் அழகே தனி.

 திரையில் கிடைத்த அறம்

நடிப்பைப் பார்த்து மதுப்பழக்கத்தை வெறுக்க முடியுமா?  நிழல் ஆட்டத்தை புரிந்து கொண்டு புகைப்பதை பகைக்க முடியுமா?
முடியும் என்கிறார்  பேராசிரியர் மு.ராமசாமி. திரைத்துறையின் பாதிப்பு பற்றி அவர் எழுதியுள தன் வரலாற்று புத்தகத்தில் இதை பதிவு செய்துளளார்.
 நவீன நாடக முன்னோடிகளில் முதன்மையானவர் பேராசிரியர் மு.ராமசாமி. அவரது செயல்பாடுகள் பற்றி  அறிவேன்.  அவரது தன் வரலாற்று நுால் பதிவை வாசித்த போது, சொல்லையும் செயலையும் மெய்யாக இணைத்து்ளள ஒருவரின் அனுபவத்தை வாசித்த  நெகிழ்வு ஏற்பட்டது. பேச்சு ஒன்றாகவும், வாழ்க்கை அதற்கு சம்பந்தம் இல்லாத வகையிலும் உள்ளோரையே அனேகமாக பார்த்திருக்கிறேன்.
வழக்கமானதை மறுக்கும் போக்கை இவரது அனுபவம் உணர்த்தியது

தமிழர் வாழ்வில் திரைப்பட தரும் அனுபவம் முக்கியமானது. அதன் பாதிப்பு இல்லாதவர்களை  தமிழ்நாட்டில் காண்பது அரிது. இதை கால ஓட்டதுடன் பதிவு செய்தவர் மிகக் குறைவு. இல்லை என்று கூட சொல்லலாம். இந்த குறையை, பேராசிரியரும் நவீன நாடாக ஆசிரியர் மற்றும் இயக்குனர் மு.ராமசாமி, தன் வரலாறாக எழுதிய புத்தகத்தில் நிவர்த்தி செய்துள்ளார்.
மனிதர்களுடன் பழகித்தான் அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. அனுபவ பகிர்வில் இருக்கும் யதார்த்தம் கூட பழகியதற்கு சமமான அனுபவத்தையே தருகிறது.

இவர் எழுதியுள்ள,  நான் வளர்த்த திரை என்ற  புத்தகத்தை படித்த போது,  நெகிழ்வான அனுபவம் ஏற்பட்டது.  எழுத்துக்களில் பாசங்கை பார்க்க முடியவில்லை; கர்வத்தை கண்டுபிடிக்க முடியவில்லை; வெட்கத்தையும் கூச்சத்தையும் கூட காணமுடியவில்லை. இவை எல்லாம் இல்லாமல், எல்லையற்றதாகி பதிவு விரிந்து கிடக்கிறது. எல்லாம் அதனதன் வௌியில் எளிமையாக நிற்கின்றன. இதுவே நெருங்கி  பழகும் அனுபவத்தை ஏற்படுத்துகிறது.
சினிமா தியேட்டர் வாசலில் நிகழும் மூன்று சீட்டு சூதாட்டம், அதில் கிடைக்கும் அனுபவம் சார்ந்து, அகமனம் எடுக்கு்ம் சபதம்… இதுபோன்று வாழ்வின் நேர்மையை வௌிப்படுத்தும் படைப்பு வௌி ஏராளம்.
நிழல் அசைவில் அறம் கற்று, வாழ்க்கையில் செயலாக்கும் அற்புதத்தை காணமுடிகிறது.  சினிமாவில் உள்வாங்கிய அறத்தை, சினிமாவுக்குள் சென்றபோது அழிக்க முயலும் இடத்தில், இயல்பாகி போன செயல்பாட்டை, பின்பற்றி நிற்பதில் உள்ள உறுதி உன்னத நிலையை எட்டுகிறது.
சினிமா கலை, தனிமனித வாழ்க்கை, சமூக செயல்பாடு அதன் மாற்றம், வரலாற்றுப்போக்கு என்று புதைந்து கிடப்பவை ஏராளம். ஒன்றை ஒன்று சார்நது அவை எப்படி உருவாகின்றன என்பதை நேரடியாக பழகித்தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது இல்லை. இவரது  நுாலை வாசிக்கும் போதே இயல்பாக பார்க்க முடிகிறது.
இவற்றுக்கு எல்லாம் வாழ்க்கை மீது கொண்டுள்ள நம்பிககை காரணமாக இருக்கலாம், உண்மையின் சாயல் எப்படி இருக்கும் என்பதை அனுபவம் வழி காண முடிகிறது. தமிழில் இப்படியும் அனுபவங்களை பதிிவு செய்பவர்களை சந்திக்கும் அனுபவம் நெகிழ்ச்சியானது. அது வாய்க்க வேண்டும்.

பல எலிகளும் சில விவசாயிகளும்

சந்திக்க வருபவர்களுடன், மனமாச்சரியம் இன்றி நேரடியாக, எளிமையாக பேசும் பண்பை கடைப்பிடிப்பவர்களை தமிழகத்தில் காண்பதரிது. தமிழ் படைப்புலகத்தில் இத்தகைய பண்பு உள்ளவர்களை பார்க்கவே முடியாது. ராஜவல்லிபுரம் வல்லிக்கண்ணன், இதில் மாறுபட்டவர்.

நாகர்கோவிலில் வெளியான குடிசை மாத இதழில், தமிழ் – தமிழ்நாடு – தமிழர்கள் என்ற தலைப்பில் வல்லிக்கண்ணன், 80களில்  தொடர் கட்டுரை எழுதிவந்தார். நகர எல்லையை மிதித்த காலத்தில் படித்த தொடர் கட்டுரைகளில் இதுவும் ஒன்று. அந்த கட்டுரை பற்றி, ஒரு கடிதம் எழுதிப்போட்டேன்.  உடனே, பதில் எழுதியிருந்தார். அந்த பதிலை படித்தது அறபுதமான கணம். அதை சொற்களில் விவரிக்க முடியாது.

இலக்கியம், சமூகம் என்று பல தளங்களில் வெளிவந்த புத்தகங்களை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்த நாட்கள் அவை. எழுத்துபவர்களை சந்திப்பது மகிழ்ச்சிக்குரியதாக இருந்தது. தொடர்ந்து, அவருடன் கடிதத் தொடர்பு வைத்திருந்தேன். படிப்பதற்கு பல புத்தகங்களை பரிந்துரைத்தார்.

இப்போது உள்ள இலக்கிய அரசியல் அவரிடம் இல்லை. எந்த குழுவையும் துக்கிப்பிடிக்கவில்லை. இப்படிப்பட்டவர்களை அபூர்வமாகத்தான் பார்க்கமுடிகிறது.

படைப்பாளர் பட்டறை ஒன்றை, சோலை இயக்கம், 1986 ல், திருச்சியில் நடத்தியது. அங்கு அவரை சந்திக்கும் வாய்ப்பு பெற்றேன். கவிஞர் கே.சி.எஸ். அருணாசலம் அவர்களுடன்  இருந்ததார். மூன்று நாட்கள், நேரடியாக பழகும் வாய்ப்பு கிடைத்தது.

பட்டறை நிகழ்வு நேரம் தவிர, யாராவது ஒரு எழுத்தாளருடன் பேசிக்கொண்டிருந்தேன். அதிகமும் செலவிட்டது வல்லிக்கண்ணனுடன்தான். பின்னர்,  சென்னை ராயப்பேட்டையில் தங்கியிருந்த அவரை, குடிசை ஆசிரியர் இரத்தினசுவாமி அவர்களுடன், சென்று ஒருமுறை பார்த்தேன். நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம். முதிர்ந்த நிலையில் உடல் தளர்வுடன் காணப்பட்டார்.

உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். முதுமையில் தனிமையின் வாட்டம் பேச்சின் ஊடே வெளிப்பட்டது. நீண்ட அனுபவமும், அதை முறைப்படுத்தி நினைவில் வைத்திருந்த திறனும் மிகவும் ஆச்சரியப்டுத்தியது. எளிமையாக வாழ்வது பற்றி அவரிடம் கற்றேன்.

அபூர்வ மனிதர். வாசிப்பு மற்றும் வாழ்க்கை அனுபவங்களை வெளிப்படுத்திய விதம் விரும்பத்தக்கது.  எழுத்துக்காக, வாழ்க்கையை அர்ப்பணி்ததவர். தமிழக அரசியல் வாதிகளை எலிகளாக உருவகப்படுத்தி நையாண்டியுடன் அவரது  இளமை நாட்களில் எழுதிய கட்டுரை தொகுதி, ஒன்றை வாசித்தேன். எழுத்தின் பல இடங்கள், பிரபல ருஷ்ய எழுத்தாளர் அந்தோன் செக்கவ் பாணியை நினைவு படுத்தியது. விவசாயிகளைப் பற்றி பேசும் போது, எலிகளைப் பற்றியும் கண்டிப்பாக பேச வேண்டிய அவசியம் இருப்பதை புரிந்து கொண்டேன்.

சூடுறதும்… அடிக்கிறதும்…

 

கன்னியாகுமரி மாவட்டம், மயிலாடி, ரிங்கல் தவுபே உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக இருந்தவர் பூமணி. எனக்கு, நேரடியாக வகுப்பு எடுத்தது இல்லை. அதே பள்ளியில், மற்றொருப் பிரிவில் படித்தேன். இவர் வேறு பிரிவுக்கு தமிழ் பாடம் நடத்துவார்.
நீண்ட அரங்கை, பிரம்பு பாய்த்தட்டியால் மறைத்து, வகுப்பறைகள் உருவாக்கப்பட்டிருக்கும். மற்ற வகுப்பறைகளில், சற்று மிகைக் குரலில் ஆசிரியர் நடத்தும் பாடம், அலையாய் மற்ற வகுப்பறை வளாகங்களையும் நிறைக்கும். அந்த பாடம் இனிமையாக இருந்தால், காதுகள் அந்த வகுப்பறையில் லயித்துவிடும்.
தமிழ் ஆசிரியர் புலவர் பூமணி, நகைச்சுவை கலந்து, ஒலி பெருக்கி போல், மிகவும் சத்தமாக பாடம் நடத்துவார். வேறு வகுப்பறையில் அமர்ந்திருந்தாலும், மாணவ, மாணவியர் காதுகள் இவர் நடத்தும் பாடம் பக்கம் போய்விடும்.
செய்யுள்களை, அதற்குரிய ஓசை நயத்துடன் பாடுவார். அவர் ஓங்கிய குரல்தான், என் மனப்பாட செய்யுள்களை நினைவில் நிறுத்தின; 45 ஆண்டுகளுக்குப்பின் இப்போதும் நிறுத்தி வைத்துள்ளது. இரவலாக வாங்கிய பாடங்கள் இளமையாக மனதில் நிற்கிறது.
கம்ப ராமாயணத்தில், கும்பகர்ணனை துயில் எழ வைப்பதை, வர்ணனையுடன், சுவையாக மிகுந்த லயத்துடன், பாடி மதிய உணவுக்குப் பின் சொக்கி போகும் கண்களை திறந்து அறிவூற்றுவார். பாடிக் கிறக்குவார். உலக்கையால், உரலில் நெல் குத்துவது போல், ஏற்ற இறக்கங்களுடன் அவர் குரல், நெஞ்சில் குத்தி பதியவைக்கும்.
குகன் படகு விடும் பாடலும் அப்படித்தான். இப்போது, விமானத்தில் பயணிக்கும் போது, மேகங்களுக்கு ஊடாக நீந்தும் போது, இந்த பாடல்தான் நினைவுக்குள் வந்து உற்சாகப்படுத்தும்; அவரை நினைவு படுத்தும்.
இதையெல்லாம் மீறி மதிய உறக்கத்தில் மாணவர்கள் கிறங்குவதைக் கண்டால், அவரது உத்தி மாறிவிடும். உற்சாக குரலில் ஒரு சிறுகதை சொல்வார். அந்த கதையை மிகவும் நுாதனமாக மாற்றி மாற்றி நிகழ்த்துவார். இது அவரது வகுப்பறையில் அவ்வப்போது ஒலிக்கும்.
ஆமையும் அணிலும் என்பது கதையின் தலைப்பு…
ஆப்ரிக்காவில் உள்ள நைஜீரிய நாட்டு எழுத்தாளர் சினுவா ஆச்சபேய், Chinua Achebe எழுதிய, things fall apart என்ற நாவலில் அடிநாதமாக, இந்த கதை இருந்ததை, பல ஆண்டுகளுக்குப்பின் அந்த நாவலை வாசித்த போது, கண்டு வியந்து போனேன். அனேகமாக அவர் சொல்லிய கதைகள், திருவாங்கூர் நாட்டில் அதாவது கன்னியாகுமரி மாவட்டத்தில், பல தலைமுறைகள் வாய்மொழியாக கடந்து வந்தவை.
ஆசிரியர் பூமணி, கடவுள் மறுப்பாளர் என பின்னர் அறிந்தேன். என் கிராமத்தில் அவர் பின்பற்றிய கொள்கையை தாழம்பூ என, விமர்சித்தனர்.
வாய் நிறைய வெற்றிலையை குதப்பியபடி, காலையில் வயல்வேலைகளை செய்து கொண்டிருப்பார். எங்களுக்கு பக்கத்து வயல்… சில நாட்கள் தந்தையுடன் வயலில் வேலை செய்து கொண்டிருப்பேன். சில நேரம் இளம் பயிர் சில் காற்றில் அலைபோல் தவழ்வது அவர் இசைப்பதை நினைவுபடுத்தும்.
சுண்ணாம்பு தொட்ட ஆள்காட்டி விரல் ஆகாயம் நோக்க… இடது கையால், வேட்டியின் ஒற்றை முனையை துாக்கிப் பிடித்தபடி, கடைசி விநாடியில் அவசரமாக பள்ளி வளாகத்துக்குள் அவர் நுழைவதை பார்த்திருக்கிறேன். மாணவர்களை உற்சாகப்படுத்த, அவர் பல நகைச்சுவைகளை பகிர்வார். அதில் ஒன்று அவர் பெயர் சார்ந்தது… கொண்டையில் வைக்கிறதும்… கோயிலில் அடிக்கிறதும்… புரிகிறதா.. பூ…மணி…யை.
நான் ஒருநாள் கூட அவரது வகுப்பறையில் அமர்ந்ததில்லை… ஆனால் பல நாட்கள் அவரிடம் பாடம் கேட்டுள்ளேன்.

 

இசை: மாற்றம் நிகழ்த்தும்…

ஜப்பான் நாட்டின் தேசிய அருங்காட்சியக, இன மரபியல் இசை அடையாளத்துறை போராசிரியர் டாக்டர் தெரிதா யாக்சிதாகா. அமெரிக்கா, வாஷிங்டன் பல்கலைக் கழகத்தில், இசையில் உயர்கல்வி முடித்தவர். நாதஸ்வர இசையில் மயங்கி, அது பற்றி தமிழகத்தில் ஆய்வு செய்தவர்.

பிரபல நாதஸ்வர வித்வான் ராஜரத்தினம் பிள்ளையின் வாழ்க்கை மற்றும் இசைப்பயணம் குறித்து விரிவான ஆய்வு நடத்தியவர். நாதஸ்வரமும், வீணையும் முறையாக கற்றுத்தேர்ந்தவர். கச்சேரி நடத்தும் திறன் பெற்றவர். சென்னை வந்திருந்த அவருடன் உரையாடியதிலிருந்து…

இசையை முதலில் எப்படி புரிந்து கொண்டீர்கள்?

மகிழ்ச்சியை அனுபவித்த தருணம் என்று சொல்லலாம். அதன் அடிப்படையில்தான் இசையை புரிந்து கொண்டேன். ஜப்பானில் கல்லுாரியில் படித்த நாட்களில், வழக்கமான ரசனையுடன் தான் என் இசை ஆர்வம் வளர்ந்தது. ஜப்பானிய இசையுடன் மேற்கத்திய இசையையும் கேட்க முடிந்தது. அதில் பேரானந்தம் அடைந்தேன். அந்த ரசனைதான் எனக்குள் ஆர்வமாக வளர்ந்தது.

இசை ஆய்வில் ஆர்வம் ஏற்பட்டது எப்படி

இசையை ரசிக்கும் மனலைதான், அது தொடர்பாக ஆய்வுகளில் ஈடுபடத்துாண்டியது. அமெரிக்கா, வாஷிங்டன் பல்கலைக்கழக மரபியல் இசைக் கல்லுாரியில் படித்த போதுதான், கலாசாரங்களுக்கும் இசை க்கும் தொடர்பு இருப்பதை புரிந்து கொண்டேன். அங்கு, பல நாட்டு இசைக் கலைஞர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அது என் இசை அறிவை விரிவு படுத்தியது.

பல நாட்டு கலைஞர்களும் வந்து இசை நிகழ்த்துவர்… பாடுவர். இது என் அறிவுத் தளத்தை மேலும் விரிவாக்கியது. இந்த விரிவாக்கம்தான், இசை ஆய்வுகளுக்குள் என்னை கொண்டு போய் சேர்த்தது என, நினைக்கிறேன்.

எங்கள் கல்லுாரியில் பலநாட்டு இசைத் தட்டுக்கள் இருந்தன. அதில் ஒருமுறை நாதஸ்வர இசையைக் கேட்டேன். அது என்னை கவர்ந்தது என்படைவிட, அதற்குள் ஐக்கியமாகிவிட்டேன் என்று சொல்ல வேண்டும்.

இன மரபு இசையை தனி அடையாளமாக கண்டீர்களா?

இசை என்பதே மரபில் இருந்து வருவதுதான். அமெரிக்காவில் நான் படித்த போது, ஒரு இசை நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சி பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த குலிங்டாங் என்ற இசை மரபைச் சேர்ந்த கலைஞர்களால் நிகழ்த்தப்பட்டது. அந்த நிகழ்ச்சிக்கு, அமெரிக்காவின் பல பகுதிகளில் வசிப்போரும் வந்திருந்தனர்.

அங்கு வந்திருந்த ஒரு குறிப்பிட்ட பிரிவினர், அந்த இசையை மிகவும் விரும்பினர். அதில் லயித்து இசைக்குள் கரைந்து போய்விட்டனர். அவர்களின் அந்த லயிப்பும் ரசிப்பும் வினோதமாக இருநதது.

அப்படி லயித்து போயிருந்தவர்களிடம் விசாரித்தேன். அவர்கள் அமெரிக்க பூர்வீகர்கள் அல்ல. பல தலைமுறைகளுக்கு முன், அங்கு குடியேறிய குடும்பங்களைச் சேர்‌ந்தோர். அவர்களின் முன்னோர், பிலிப்பைன்ஸ் அருகே உள்ள மிட்லாநாட் என்ற தீவுப்பகுதியில் வசித்தவர்கள் என்று கூறினர். இது எனக்கு வியப்பாக இருந்தது.

அன்று நடந்த இசை நிகழ்ச்சி, பிலிப்பைன்ஸ் நாட்டின் ஒரு பகுதி மக்களின் கலாசார மரபுகளை உள்ளடக்கியிருந்தது. அவர்களின் லயிப்புக்கு காரணம், இன மரபியல் என, புரிந்து கொள்ள முடிந்தது.

ஒரு இனத்தின் மரபு சார்ந்த இசை, அந்த இன மரபுக்குள் ரத்தத்தில் கலந்துள்ளதாக உணர்ந்தேன். மற்றெல்லாவற்றையும் விட, இன மரபிசை, இனத்தின் உள்ளார்ந்த லயிப்புக்கு உரியது என்பது தெளிவானது.

மரபிசையில், மற்ற ஒரு இனத்தை இழிவுபடுத்தும் நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளதா?

ஒரு இனத்தின் மரபிசை மற்றொரு இனத்தை முழுமையாக ஈர்க்காமல் இருக்கலாம். ஆனால், இழிவுபடுத்தும் என்று சொல்ல முடியாது.

மரபிசை மண் சார்ந்த பண்பாட்டுடன் உருவாவதாக கொள்ளலாமா?

அப்படித்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்; வேறு வகயைில் இருக்க வாய்ப்பில்லை.

தமிழகத்தில் உங்கள் இசை ஆய்வுகள் பற்றி…?

அமெரிக்காவில் படித்துக் கொண்டிருந்த போது, தமிழக இசைத்தட்டு ஒன்றை ரசிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அது, மதுரை இசைக் கலைஞர்களின் நாதஸ்வர இசை. அதில் லயித்துப் போய்விட்டேன். அது பற்றி அறியும் ஆர்வம் ஏற்பட்டது.

அப்போது, தஞ்சாவூரைச் சேர்ந்த விவேகவாகினி என்ற கலைஞர், எங்கள் கல்லுாரியில், வாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சி நடத்த வந்திருந்தார். அவரது இசையும் என்னை கவர்ந்து லயிக்க வைத்தது. அவரிடம் தமிழகத்தில் மரபு இசை குறித்து கேட்டேன்.

அவர்தான், தமிழகத்தில் உள்ள இசை பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வத்தை ஏற்படுத்தினார்; தமிழ் கற்றுக் கொண்டால்தான், இசை ரகசியங்களை அறிந்து கொள்ள முடியும் என்றார். அவரது அழைப்பை ஏற்று சென்னை வந்தேன்.

இங்கு சங்கீத மேதை ராஜரத்தினம் பிள்ளையின் நாதஸ்வர இசையில் கரைந்து போனேன். அவரைப்பற்றி, அவரின் இசை வாசிப்பு பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என முயற்சி எடுத்தேன். என் முயற்சிக்கு, ஆய்வு உதவி கிடைத்தது.

ஆய்வு உதவியால், வீணையும், நாதஸ்வரமும் கற்றுக்கொண்டேன். நாதஸ்வர வித்வான் ராஜரத்தினம் பிள்ளை பற்றி, விரிவாக தகவல்களை சேகரித்தேன். பெரும் முயற்சி செய்து பல இடங்களுக்கு அலைந்து, ஏராளமான தகவல்களை சேகரித்து ஆய்வு செய்தேன்.

அவற்றில் முக்கியமானது. நாதஸ்வர இசைக் கருவியை, ராஜரத்தினம் பிள்ளை தன் வசதிக்கு ஏற்ப மாற்றியமைத்த விதம். அது என்னை வெகுவாக கவர்ந்தது. அது பற்றி விரிவாக தகவல்களை சேகரித்துள்ளேன். நாதஸ்வரத்தை உருவாக்கிய கலைஞர்கள், அதை மீட்டிய வித்வான்கள் என, பலரை சந்தித்து தகவல்கள் திரட்டினேன். இந்த இசைக்கருவியை இசைக்க எவ்வளவு முயற்சி செய்ய வேண்டும் என்பதை அப்போது உணர்ந்தேன்.

ஜப்பானில் இன மரபிசை தாக்கம் பற்றி?

ஜப்பானில் இன மரபிசை நெருக்கடியில் உள்ளது. அதை, ஆதாயம் தேடாத சில இசைக்குழுக்கள் காப்பாற்றி வருகின்றன. கொரியாவில் இருந்து, ஜப்பானில் குடியேறியவர்களும் இன மரபிசையை பாதுகாத்து வருகின்றனர்.

தமிழக இன மரபிசையை எப்படி பார்க்கீறீர்கள்?

தமிழகத்தில், இனக்குழுக்களுக்குள் ஏராளமான வகை இசை போக்குகள் உள்ளதாக அறிகிறேன். அது பற்றி விரிவாக ஆய்வு செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை.

தமிழகத்தில் பரவலாக சினிமா இசைதானே உள்ளது?

உண்மைதான். அது கொண்டாட்டமாகவும் உள்ளது. அதை இனமரபிசை என்று எடுத்துக்கொள்ள முடியுமா என, ஆராயவில்லை. ஆனால், அந்த இசையால் பாதகம் இருப்பதாக தெரியவில்லை

சினிமா இசை என்பது விற்பனை சரக்குத்தானே?

உண்மைதான். உலகம் முழுவதும், இசை விற்பனை சரக்காகத்தான் உள்ளது. மரபு சார்ந்த அடையாளமாகவும் உள்ளது.

தற்போது அரசியல்,பொருளாதார மாற்றங்கள் விரைந்து நடக்கிறதே.. இதில், மரபியல் இசை அடையாளம் எதை சார்ந்து நிற்கும்?

மரபிசை அடையாளம், மாற்றங்களை ஏற்படுத்தும். மாற்றங்களுடன் நிகழும். மாற்றங்களுக்கு பின்னும் உயிர்ப்புடன் நிற்கும் என, நம்புகிறேன். மரபு இசை என்பது ஒரு இனத்தின் உயிரில் கலந்தது.

தமிழை தாய்மொழியாக கொண்டோர் இசை மீது நம்பிக்கை வைத்துள்ளதாக கணிக்கிறீர்களா?

தமிழகத்தில் ஏராளமான இசை கலைஞர்கள் இருப்பதை காண்கிறேன். இசை பள்ளிகளைக் காண்கிறேன்; இசை கற்போரை காண்கிறேன். அதைவிட மேலாக, புலம் பெயர்ந்து, மேற்கத்திய நாடுகளில் வசிக்கும் தமிழர்கள், இசையை தங்கள் அடையாளமாக கொண்டிருப்பதை காண வியப்பாக உள்ளது.

கனடாவில் உள்ள டொராண்டோ நகரில் மட்டும், 100 க்கும் அதிகமான இசை ஆசிரியர்களை சந்தித்தேன். அவர்களிடம், 3000 க்கும் அதிகமான மாணவர்கள் இசையை ஆர்வத்துடன் கற்றுக் கொள்வதாக தெரிவித்தனர். இது வியப்பான புள்ளி விபரம். புலம்பெயர்ந்து வாழுவோரை, இன மரபிசை உயர்ப்புடன் வைத்திருக்கிறது. இதை நிரூபிக்க வேறு புள்ளி விவரங்கள் எதுவும் அவசியமில்லை என, நினைக்கிறேன்.

 

கவலையை போக்கும் காக்கை

பறவைகளை தேடுவதும், அவற்றை தொடர்வதும், ஒலியை, நடத்தையை ரசிப்பதிலும்  தனி  சுவாரசியம் உண்டு.

உலகம் முழுவதும் ஊர்ப்புற பறவைகள் கணக்கெடுப்பு, 2014 ஜனவரி 17 ம் தேதி நடந்தது. இதில் பங்கேற்க ஆர்வம் ஏற்பட்டது, தயக்கம்தான் என்றாலும் பங்கேற்றேன்.

ரிஷி வேலி கல்வி நிறுவனம், பறவைகள் பற்றிய, சுய கற்றல் முறையில் தயாரித்த ஆங்கில பாட நுால்களை வாசித்திருக்கிறேன். அது, கொஞ்சம் உதவலாம் என நம்பினேன்.

அன்று ஞாயிற்றுக்கிழமை. அதிகாலை 4:00 மணிக்கே எழுந்து விட்டேன். சைக்கிள் பயற்சியை முடித்து அதிகாலை, 5:40 மணிக்கு, வீட்டின் மாடிக்கு வந்தேன். இருள் விலகவில்லை; ஆனால், பறவைகளின் குரல் தெறித்துக் கொண்டிருந்தது.  காகங்களின் கரைச்சல்தான் துாக்கல். மரங்களில் மாறி மாறி அவை பயணித்துக் கொண்டிருந்ததை, கரைசல் வழி அறிய முடித்து.

அவை, பறப்பதைக் கவனி்த்துக் கொண்டிருந்தேன். எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கியது.

தொடர்ந்து, மைனாக்கள் சத்தம் போட்டன. அந்த குரல் ஏற்கனவே அறிமுகம் என்பதால், அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்படவில்லை.  எண்ணிக்கையை அவதானித்தேன்.

இடையே, மேலும் சில பறவைகளின் குரல்கள்… அவை பரிச்சயம் என்றாலும்,  அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டது.

மைனாக்கள், ஐந்து விதமாக குரல் கொடுப்பதை கவனித்திருக்கிறேன். ஒருவித குரல் மகிழ்ச்சியான மனநிலையை ஏற்படுத்தும். அப்படிப்பட்ட குரல் எழுப்பும் போது, இணை மைனா குதுாகலம் அடைவதை கவனித்திருக்கிறேன்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில், மைனாக்களை வீட்டில் வளர்த்து, பேச பழக்குவது உண்டு. என் உறவினர் ஒருவர், ஒரு மைனாவுக்கு, ‘அக்கக்கா…. கள்ளன்…கள்ளன்…’ என்று பேசக் கற்றுக் கொடுத்திருந்தார்.

இலங்கை தமிழர்களின், குடியிருப்புகளில், கிளியும் மைனாவும் வளர்ப்பதை பார்த்திருக்கிறேன். மைனாக்கள் மிகவும் மெல்லியதாக இனிமையாக சீட்டி அதாவது விசில் அடிக்கும்.

சரி… பறவை பார்க்க வருவோம்

தொடர்ந்து, அண்டங்காக்கைகளின் கனமான குரல் கேட்டது. எதிர்வீட்டு தென்னையில் அமர்ந்திருந்ததை கவனித்தேன். தனி்த்த குரல் வளம் உள்ளவை. பலர் இதை ரசிப்பதில்லை. ஆனால், அரசங்காகத்தின் கரைச்சலை விட, அண்டங்காக்கையின் கனம் நிறைந்த குரல் சுவாரசியப்படுத்தும். ஒன்றைத் தொடர்ந்து மற்றொன்று, பக்கத்து மாடி சுவரில் அமர்ந்தது.

விடியலால், வானம் பொலபொலத்தது. காகங்களின் வரவு அதிகரிக்க  அவை, நக்கல் குரலிலும் ஒன்றைக் குரலிலும் கரைந்து கொண்டே இருந்தன. மைனாக்களிலும் மற்றொரு இணை வந்து, குப்பையில் இரை தேட துவங்கின.

குப்பை சிதறிக் கிடந்த பகுதியில், ஒரு கீரிப்பிளை்ளை சுற்றித் திரிவதைக் கவனித்தேன். சற்று நேரத்தில், அதன் இணை கீரியும் சேர்ந்து கொண்டது. அவை குப்பையில் அலைந்து கொண்டிருந்தன.

இதற்கிடையில், கிழக்கு நோக்கி சாய்வாக, சில பறவைகள் வேகமாக பறந்து மறைந்து கொண்டிருந்தன. அவை மிகவும் சிறியவை. பறக்க சிரமப்பட்டது போல் தோன்றினாலும், தனி அழகு தெரிந்தது. காற்றை கிழித்துக்கொண்டு பறந்தன அவை, ஒரே திசையில் பறந்து மறைந்து கொண்டிருந்தன.. 28 பறவைகள் என், தலைக்கு மேலாக பறந்து சென்றதை எண்ணிப்பார்த்தேன்.. அவற்றின் வடிவம் அழகு. ஆனால், அவற்றை ரகம் காணமுடியவில்லை.

சில, பச்சைக் கிளிகள் உச்சிவானில் சத்தமிட்டபடியே, பறந்து மறைந்தன. இப்படி சென்றவற்றில், ஏழு எண்ணிக்கையை அவதானித்தேன். சில தனித்தனியாக பறந்து  கொண்டிருந்தன. எளிமையான கார்ட்டூனாக வரைந்து விட முடியும் என நினைத்தேன்.

அப்போது சற்று துாரத்தில், கருஞ் சிட்டுவின் குரல்.  கொலுசு குலுங்குவது போல் இருந்தது. அந்த ஓசை பரிச்சியம் என்பதால், எளிதில் அடையாளம் காண முடிந்தது.  மாணிக்க பரல்களை உருட்டி விடுவது போல் ஒலி இருக்கும். அந்த சத்தம் மென்மையானது. அற்புதமானது. மனசில் ஒலித்து்க்கொண்டே உயிர்ப்புடன் இருக்கும். இநத ஒலியை அறிமுகப்படுத்தியது என் துணைவிதான். இந்த பறவைகள் வீட்டருகே வந்துவிட்டால், ஓ.. அற்புத சுிட்டுக்களே… என்று ஆர்வமாக சென்று கவனிப்பார். குழந்தைகளையும் அழைத்து காண்பிப்பார்.

சிட்டுக்கள், பல விதமாக ஒலி எழுப்புவதை கவனித்திருக்கிறேன். அனேகமாக, இவற்றில் ஆண்கள்தான் நுாதனமாக ஒலி எழுப்பும். அவற்றின ஓலிக்கு ஏற்ப, பெட்டை நகர்ந்து நிகழ்வை ஒழுங்கு செய்யும்.

சிட்டு என்று நான் குறிப்பிடுவது அடைக்கலான் குருவிகளை அல்ல.

பறவை ஆர்வலர்கள், சிட்டு என்று அடையாளம் காட்டுவதை நான்,  அடைக்கலான் குருவி என்று அடையாளம் கணடுள்ளேன்.

அடைக்கலான் குருவியுடன் நீண்ட பரிச்சயம் உண்டு. என் குடும்ப வீட்டில், பத்துக்கும் மேற்பட்ட கூடுகளில் அவை வசித்தன. விவரம் தெரிந்த நாள் முதல் அவற்றை தெரியும் அவை எங்கள் குடும்ப உறுப்பினர் என்பதால், அனைத்து செயல்களுடனும் பரிச்சயம்.  எங்களுடன் அடைக்கலமாக வாழ்வதால, அடைக்கலான் குருவி என்று அப்பா சொல்லித்தந்திருந்தார்.

சில நேரங்களில், அவற்றின் கூட்டில் இருந்து குஞசுகள், மாடி அறையில் தவறி விழுந்து விடும். அவற்றை, மிகவும் மெ்ன்மையாக எடுத்த அப்பாவிடம் காட்டுவோம். எணியை எடுத்துச் சென்று, குறிப்பிட்ட கூட்டைத் தேடி குஞ்சை கவனமாக வைப்போம். அது அந்த காலம்.

இப்போது, அடைக்கலான் குருவி கூடுக்ளை காணமுடிவதில்லை. அவற்றின் இனிய ஒலி, இதயத்தின் ஓரத்தில் சிந்திக் கொண்டே இருக்கிறது.

பறவைகளை ரசித்து நின்ற போது,  ஒரு செண்பகம் அந்த வழியாக பறந்தது. தொடர்ந்து, மீன் கொத்தி ஒன்று, மின் கம்பியில் நடனம் ஆடிக் கொண்டிருந்தது. ‘அங்கே என்ன பார்த்துக் கொண்டிருக்கிறாய்,’ என, என் கவனத்தை ஈர்த்தபடி, கருங்குருவி பக்கத்து வீட்டு மாடியைச் சுற்றி பறந்தபடியே சத்தம் போட்டுக்கொண்டிருந்தது.  ரசித்து க்கொண்டிருந்த போது, மணி, 7:30 ஐ தாண்டிவிட்டது. இப்போது இயந்திரத்தை நோக்கி பதட்டமாக நகரத் துவங்கினேன்.

பறவைகள் கணக்கெடுப்பை ஒட்டி, இணையத்தில், காக்கைகளையும் மைனாவையும் மட்டுமே பதிவிட முடிந்தது. மற்ற பெயர்களை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.  ஆங்கில பெயர்களை இனம் காண்பதில், தடுமாற்றம் ஏற்பட்டதால், பதிவிடாமல் தவிர்த்தேன். இப்போது, நண்பர் ஜெகந்நாதனும், ஆசையும் இணைந்து எழுதிய, பறவைகள் கையேடு புத்தகத்தின் வழி, அடையாளம் காணவும் அறிந்து கொள்ளவும் முடிகிறது.

இந்த புத்தகத்தின் அடிப்படையில், மற்றொரு முறை மாடியில் பறவைகளை ரசிக்க சென்றோம். என் மகளும் உடன் வந்தார். மைனாக்களையும், காகங்களையும், புறாக்களையும் பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது உயரத்தில் கரும்பருந்து பறந்த கொண்டிருந்தது.

 இறக்கையை ஆட்டாமல், எளிமையாக, அது பறந்து சென்ற விதத்தை வியந்து எனக்கு பறப்பு வனப்பை  விளக்கினார் மகள். இதற்கிடையில், ஒரு மைனா கூட்டையும் பார்த்துவிட்டோம். சிறிது நேரத்தில், கரும்பருந்து மீண்டும் வட்டமடித்தது. அதை விரட்டியடிக்க ஒரு காகம் மேலும் கீழுமாக பறந்து கொண்டிருந்தது.

திட்டமிடுதலின் இலக்கு வெற்றி

பிரபல எழுத்தாளர் ஜோ டி குரூஸ் அவர்களின் கொற்கை நாவலுக்கு, சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த நாவலை ஒரே மூச்சில் வாசித்து விட முடியாது. உரிய காலஅவகாசத்தி்ல் மட்டுமே வாசிக்க முடியும்.

சென்னை போன்ற நகரங்களில் வசிப்போர், முறையான முன் திட்டமிடல் இன்றி, வாசிப்பது கடினம். அவ்வளவு பெரிய புத்தகம். ஒரே மூச்சில் வாசித்து முடித்தவர்கள், இதையே வேலையாக செய்தவர்களாக இருக்க முடியும்.  இந்த கொற்கை நாவலை வாசிக்க நான் எடுத்துக் கொண்டது, 22 நாட்கள்.


அலுவலக பணிகளுக்கு இடையே, சிறிய உலாக்களில், இதை வாசித்து முடிக்க முடிந்தது.  மொழிநடை ஈர்த்தது. யாழ்ப்பாண தமிழ் பேச்சு நடையை பழகியவர்களும் நெல்லை குமரி மாவட்ட வாசிகளும், இதை எளிதாக வாசிக்க முடியும். கதைக்களம் இந்த வட்டாரங்களை ஒட்டியது என்பதால், சொற்களில் அநத லயம் தவிர்க்க முடியாதது.

கொற்கையில் விவரிப்பு, காட்சிகளை உள்ளடக்கியுள்ளது. ஆனாலும், பல இடங்கள், கடந்த காலத்துக்குள், நிகழ்காலம் நுழைந்து கொஞ்சம் குழப்பம் ஏற்படுத்துகிறது. முறையான  பிரதி செம்மையாக்கம் செய்யப்படாததே இதற்கு காரணமாக இருக்கலாம்

துல்லியப்படுத்தப்பட்ட எழுத்து வடிவம். நேர்த்தியான விவரிப்பு, நம்பகத்தன்மையை அதிகரிக்கும் நிகழ்வுகள் என, புத்தக பயணிப்பில்  காண முடிந்தது.

வாசித்து முடித்தபின், படைப்பாளரை அவரது அலுவலகத்தில் சந்தித்தேன்.

கப்பல் கம்பெனியில் உயர் பொறுப்பில் இருப்பவர். எல்லா விஷயங்களிலும் அவரிடம் திட்டமிடல் இருந்தது. தமிழ் படைப்பாளர்களிடம் காணமுடியாத அல்லது அவர்கள் உதாசீனப்படுத்தும் விஷயம். குரூஸ் எழுதிய இரண்டு படைப்புகளுமே, நீளமானவை. விவரிப்பு, உரையாடல் நிரம்பியவை. காட்சிகளை உள்ளடக்கியவை. இவற்றை உரிய திட்டம் இன்றி பதிவு செய்ய முடியாது. அவரது திட்டமிடுதல், தமிழ் எழுத்தாளர்களுக்கு முன்மாதிரி.எனக்க தெரிந்தவரை சுந்தரராமசாமியிடம் இந்த திட்டமிடுதல் உண்டு.

எங்கள் உரையாடல் கிட்டத்தட்ட அது சார்ந்தே அமைந்திருந்தது. அவரது அலுவலக சந்திப்பு அறையில், கிட்டத்தட்ட மேற்கத்திய பாணியில், தண்ணீர் நிரம்பிய கண்ணாடி டம்பளர்களை மையப்படுத்தியிருந்தது. அவரது வெற்றிக்கு இந்த திட்டமிடல் உதவியுள்ளதாக கணித்தேன். ரைட்டர்ஸ் மேகசீன் என்ற ஆங்கில இதழில், படைப்பு திட்டமிடுதல் பற்றி ஒரு கட்டுரையை, சமீபத்தில் வாசிக்க நேர்ந்தது. அதை வாசித்து முடித்ததும், எழுத்தாளர் குரூஸ்தான் நினைவுக்கு வந்தார். தமிழில் சிறந்த படைப்புகள் தோன்ற, திட்டமிடலுக்கு முன்னுரிமை வேண்டும்.

மறையும் பாரம்பரியம்

தமிழகத்தில், சமணத்தை பின்பற்றுவோர், 40,000 க்கும் ஆதிகம். இதில், 70 சதவீதம் பேர், விவசாயத்தைத் தொழிலாகக் கொண்டுள்ளனர். வந்தவாசி பகுதி கிராமங்களில், இவர்கள் அதிக அளவில் வசிக்கின்றனர்; கும்பகோணம், மதுரை, காஞ்சிபுரம் பகுதி கிராமங்களிலும், தமிழ் சமணர்களின் வசிப்பிடம் உண்டு. 

விவசாயம் சார்ந்து வாழ்வதால், பொங்கல் முக்கிய பண்டிகை.  கொண்டாட்டத்தில் வழக்கமான நடைமுறைகளை பின்பற்றினாலும்,  பிரத்யேக வழக்கங்கங்களை, சமணக்குடும்பங்களில், பாரம்பரியமாக கடைபிடிக்கின்றனர்.

பொங்கலுக்கு முந்தைய நாள், போகிபண்டிகையில். வீட்டை சுத்தம் செய்வது போன்ற நடைமுறைகளை, மற்றவர்களைப் போல் கடைபிடிக்கின்றனர். ஆனால்… சின்ன மாற்றம்.

பொங்கலுக்கு முந்தைய இரவு, கிராமத் தெருக்களில், வலம்வரும் சமண பள்ளி பூசாரி பண்டிகையை அறிவித்து  நடைமுறையை துவக்குகிறார்.  சங்கு முழங்குவதுடன்,  சேமங்கலம் என்ற கருவியை இசைத்து, இயற்கையை புகழ்ந்து பாடிக்கொண்டே, தெரு வலம் வந்து பண்டிகையைத் துவக்குகிறார். இது, குதுாகலம் ஊட்டுகிறது.  இவரது பாடல்களை ரசிப்பதற்கென்றே, வீடுகளில் விழித்து காத்திருந்தவர்கள் உண்டு. இப்போது, நிலைமை மாறிவிட்டது.

இப்போது இந்த நடைமுறை ஒரு சடங்கு போல் நிகழ்த்தப்படுகிறது. சடங்கு முறையிலாவது, பாரம்பரியம் வாழுகிறதே என ஆறுதல் படுகின்றனர் பெரியவர்கள்.

புத்தாடை உடுத்தி, உடன் ஊழைத்தோரை மகிழ்விப்பது போன்றவை நடைமுறையில் உள்ளன. ஆனால், விவசாயத்தொழில், இயந்திரமயமாகி வருவதால், அதுவும் கொஞ்சம் கொஞ்சமாக விலகுகிறது. நவீன வேளாண்மையில், விலங்கு சக்திக்கு இடம் இல்லாதாதல், மாட்டுப்பொங்கல் கூட மாறி வருகிறது.

 பொங்கல் அன்று, வீட்டு வாசலில், பொங்கலிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். தமிழகத்தில் வட மாவட்ட பகுதிகளில், கிராம கோவில்களில் சேர்ந்து பொங்கலிடுவதை வழக்கமாக கொண்டிருந்தாலும், சமணக் குடும்பத்தினர், வீட்டு வாசலை அலங்கரித்து, அங்கேதான் பொங்கல் வைக்கின்றனர்.

வெண் பொங்கலுக்கு, தொட்டுக் கொள்ள தோதாக, பச்சை மிளகாய் பச்சடி படைப்பது வழக்கமாக உள்ளது. இனிப்பு பொங்கல், கரும்புச்சாறு கலந்து தயாரிக்கின்றனர். தயாரித்த பொங்கலை வீட்டுவாசலில், சூரியனுக்கு படைத்து வழிபடுகின்றனர்.

 பண்டிகைக்கான பிரத்யேக உணவு வகைகள், தயாரிக்கின்றனர் அவற்றில் முக்கியமானது வெள்ளைப்பூரி.  பச்சரிசியையும், துவரம்பருப்பையும் கலந்து, இந்த உணவைத் தயாரிக்கி்ன்றனர். இத்தடன், வேர்க்கடலை சட்டினியை தொட்டுக்கொள்ள பரிந்துரைக்கின்றனர்.

 கால வெள்ளத்தில், இந்து உணவுகள் மறைந்து வருவதாக தமிழ்நாடு சமணர் பேரவை தலைவர் அறவாழி. கூறினார். அவர் கூறுகையில்,“ கால ஓட்டத்தில் மாற்றம் தவிர்க்க முடியாததாகவிட்டது. வெள்ளைப்பூரி போன்ற பிரத்யேக உணவுகளை, இப்போது பலர் தொடர்வதில்லை. இந்த உணவு  கிராமங்களில் வசிக்கும் மூத்தோர்களால் மட்டுமே தயாரிக்கப்படுகிறது,” என்றார்.

பொங்கலை யொட்டி, தமிழ் சமணர்கள் தயாரிக்கும் மற்றொரு பாரம்பரிய உணவு மோர்க்களி. பச்சரிசி, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் மற்றும் மோர் கலந்து இதை தயாரிக்கின்றனர். இந்த உணவும், வழக்கத்தில் மறைந்து வருகிறது. முதியோர்களால் மட்டுமே, இப்போது தயாரிக்கப்படுகிறது; இளைஞர்களோ, இளம் பெண்களோ அதிக ஆர்வம் காட்டுவதில்லை என்கிறார், வந்தவாசியைச் சேர்ந்த முன்னாள் போலீஸ் அதிகாரி ஜம்புக்குமரன்.

வெள்ளைப்பூரி தயாரிக்கலாம் வாங்க

அரிசி,  3 பங்கு; துவரம் பருப்பு, 1 பங்கு எடுத்து ஊறவைத்து, அரைத்துக் கொள்ள வேண்டும். பூரி தயாரிப்பதற்கான மாவு போல் பிசைந்து சிறிய உருண்டைகளாக்கி, பூரியைப்போல் உருட்டி தயாரித்துக் கொள்ள வேண்டும். அதை கொதிக்கும் சமையல் எண்ணெயில், வேகவைத்து எடுத்தால், சுவையான வெள்ளைப்பூரி தயார். இதை  தொட்டு சுவைக்க வேர்க்கடலை சட்னிதான் கூட்டு

செருக்கழிக்கும் செம்மல்

வாழ்க்கையை இயல்பாக கொண்டாடுவோர் குறைவு. படைப்பாளிகள், இயல்பை படைத்து, வாழ்க்கையில் கோட்டை விட்டுவிடுவர்.
இதற்கு நேர்மறையாக எளிமையான இருப்பை எப்போதும் வெளிப்படுத்தும் எழுத்தாளர்களை பார்த்திருக்கிறேன். இதில், குமாரசெல்வாவை முதன்மையாக சொல்லலாம்.
படைப்புகள் போலவே இயல்பாக வாழ்பவர். எதையும் வெளிப்படையாக விவாதிக்கும் திறன் பெற்றவர்.
கூட்டங்களில் அவர் இருக்கும் இடங்கள் தனித்து தெரியும். அங்கு, கலகலப்பு இருக்கும். அவரது இயல்பான பேச்சு மொழி வசீகரிக்கும். வீட்டிலும், பொது இடங்களிலும், மேடையிலும் அவரது பேச்சு அணுகுமுறை ஒரே மாதிரியானதுதான்.
வட்டாரங்களுக்குள் வட்டாரங்கள் இருப்பதை அவரது இயல்பு உணர்த்தும்.
‘நாங்க நாஞ்சி நாடு’ என்று நெஞ்சு நிமிர்த்தி ஒருவகை மனச் செருக்குடன் திரிந்தவர்களை, அவரது மொழியும் விவாத வன்மையும் கலக்கு திணறடித்தது; செருக்கழித்தது . நாஞ்சில் மொழி மிகக்குறுகிய வெளியுடையது. அதைவிடவும் பரந்த வட்டாரத்தன்மையுள்ள மொழி ஆளுமை கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறபகுதிகளில் உள்ளதை வெளிப்படுத்தியவர் அவர்தான்.
மக்களைச் சாராமல் அவர் எதுவும் எழுதியதில்லை. அனுபவங்களை உள்ளடக்கிய சொற்கள் அவருடையவை. அவரது வாழ்க்கை போலவே இயல்பானது அவரது சொற்களும். உக்கிலுவும், குன்னிமுத்துவும் புதிய திறப்பை காட்டும்.
இதை வாசிக்க அவரைப்போலவே எளிமையான மனநிலைக்குள் வரவேண்டும். அப்போது, உங்கள் வாழ்க்கையின் பல தருணங்களை குமாரசெல்வா நினைவு படுத்துவார். அவரை உங்கள் சுய முகமாக பார்க்கலாம்.
இதழ் 17 க்கு, 2013 ல் எழுதி கொடுத்த கட்டுரை