Design a site like this with WordPress.com
தொடங்கவும்

எதை சாப்பிடுகிறேம் நாம்?

இயற்கை முறையில் சாகுபடி உலகளவில், 30 மில்லியன் எக்டேரில் நடக்கிறது. விஷமற்ற உணவுப்பொருட்களை உற்பத்தி செய்வதில் உலக அளவில் இந்தியாவுக்கு, 117 வது இடம். உலக அளவில், அதிக வேளாண் பரப்பைக் கொண்ட நாடுகள் இந்தியாவும், சீனாவும் தான்.

இந்தியா அளவில், தமிழகத்தின் இயற்கை வழி வேளாண்மை, ஐந்து சதவீதம் நிலத்தில் மட்டுமே நடக்கிறது. பளபளப்பை ரசிப்பதிலும் புசிப்பதிலும் தமிழர்களக்கு ஆர்வம் அதிகம்.
கத்தரிக்காயும், தக்காளியும் குண்டு குண்டாக இருந்தால், துாக்கி வைத்து மகிழ்ந்து கொண்டாடுவோம். உடல்நலம் பற்றி, மனசு எந்த கேள்வியும் எழுப்புவதில்லை.
இயற்கையாக விளைந்த காய் கனிகளில் பளபளப்பு அவ்வளவாக இருக்காது. ஆனால், பாதுகாக்கும் பண்பு இருக்கும்.
விஷத்தை சேர்த்து தினமும் சாப்பிடுகிறோம். பலசரக்கு கடையில் பொருள் வாங்க, மாதாந்திர பட்டியல் போடுவது போல, மெடிக்கல் ஸ்டோருக்கு வாரந்திரம், பட்டியல் தயாரித்து, மாத்திரைகளை வாங்கி சாப்பிடும் நிலை வந்துவிட்டது.
நஞ்சை கலப்பதால், இந்திய திராட்சை, கொத்தமல்லி, கறிவேப்பிலையைக் கண்டு வெளிநாட்டவர் அஞ்சி ஓடுகின்றனர்.
சரி… கொஞ்சம் யோசிப்போம்.
விவசாயத்தில் இயற்கை முறை பூச்சி விரட்டிகளை பாருங்கள். உங்கள், முன்னோரிடம் இருந்தவற்றை நினைவில் கொண்டு வாருங்கள். அறிவும் தெளிவும் எவை என புரியும்.

பயிர் விளைச்சலை பாதுகாத்தவை பாம்பு, பறவை, குளவி, தேனீ, தவளை, பூனை, பூச்சி என இப்படி ஏராளம்.
சாரைபாம்பு வயல்வெளியில் தினமும், எலிகளை பிடித்து தின்று இயற்கையை சமப்படுத்தியது. அவற்றின் தோலை உரித்து விட்டோம். சமர்த்துக்கள் நாம். பேஸ்… பேஸ்…
கோழிகள் கரையான்களை தின்று சமன் படுத்தி வந்தன. பிராய்லர் கோழி போதும் என, வீட்டில் நாட்டுக்கோழியை கண்ணில் படாமல் ஒழித்து விட்டோம்.

ஆந்தைகளும் கோட்டானும் இரவு வயல் வெளியில் அமர ஒற்றை கம்பு நட்டு வைத்தோம்…
தாவர பூச்சிவிரட்டிகளாக அரளி, தும்பை, நொச்சி, துளசி, இலுப்பை, புங்கம், வேம்பு பயன்படுத்தினேம்
எண்ணெய் காகிதமும், கருவாட்டு பொடியும் பயன்படுத்தி, பூச்சி பொடிகளை கட்டுப்படுத்தினோம்
கத்தரி, வெண்டையில் காய்ப்புழுவை தடுக்க உயிர் ஒட்டுண்ணிகளை பயன்படுத்தினோம். குழல் விளக்கு அருகே எண்ணெய் தடவிய காகிதத்தை கட்டும் முறையை மறந்துவிட்டோம்
மஞ்சள் நிற காகித ஒட்டுப்பொறியை வைத்தால், அஸ்வினி, சாறு உறிஞ்சும் பூச்சிகள் ஒட்டி அழிந்து விடும் என்பது மறந்து போய்விட்டது.
பாட்டிலில் துளையிட்டு கருவாட்டுப் பொடி வைத்தால் கொய்யா தோட்டம், மாந்தோப்பில் தீமை செய்யும் பழ ஈக்களை கவர்ந்து அழிக்க முடியுமே.
மயில், கிளிகளை விரட்ட அக்னி அரக்கனை உருவாக்கி கட்டினோம்.
தலைவலி, காய்ச்சலுக்கு மளிகை கடையில் அலோபதி மருந்து வாங்கித்தின்றவுடன் எல்லாம் மறந்து போச்சு.

சிந்தித்து பார்த்தோமா?.
வயலுக்ககுள் எந்த பயிரை சாகுபடி செய்கிறோமோ, அதை பாதுகாக்க வரப்பில் செடிகளை தேர்வு செய்து நட்ட காலம் மலை ஏறிவிட்டது.
வயல் வெண்டைக்கு, வரப்பு ஆமணக்கு பாதுகாப்பு
வயல் தக்காளிக்கு, வரப்பு மரிக்கொழுந்து பாதுகாப்பு
வயல் கத்தரிக்கு, வரப்பு மணத்தக்காளி பாதுகாப்பு,
வயல் மிளகாய்க்கு வரப்பு அகத்தி பாதுகாப்பு
காலிபிளவர், முட்டைகோசுக்கு கடுகு செடியே பாதுகாப்பு

தட்டான், ஊசிதட்டான், பொறிவண்டு, நாவாப்பூச்சியினங்கள், பயிர்களுக்கு, 60 சதவீத பாதுகாப்பை தருவதாக இயற்கை விஞ்ஞானிகள் அறிவு தந்துள்ளனர்.
ஆமணக்கு, துவரை, செண்டுமல்லி, கொத்தமல்லி, சூரியகாந்தி, தட்டைபயறு செடிகளில் மலரும் பூக்கள், நன்மை செய்யும் பூச்சிகளை கவர்ந்திழுக்கும். இவை, பயிர்களை சேதப்படுத்தும் பூச்சிகளை தின்றுவிடும். பூச்சிகொல்லிகளை பயன்படுத்துவதால், நன்மை செய்யும் பூச்சிளும் அழிந்து விடுமே…
இயற்கை வழியில், தீர்வுகளை தேடுவோம். உலக உயிர் சூழலை பாதுகாப்போம்.
மருத்துவமனைகளை மூடுவோம்.

 

 

உரையாடலை வரிவடிவமாக்கும் மென்பொருள்

தமிழ் மொழியை அறிவியல் ரீதியாக மேம்படுத்தும் தமிழ் மென்பொருள் தயாரிப்பு தொடர்பாக லண்டனில் ஆய்வு செய்து வரும்  திரு. விக்னேஷ் ராஜ் பேட்டி
உங்களைப் பற்றி…
சென்னையில் பிறந்தேன், இந்தியாவின் கிழக்கு மாநில பகுதியில் வளர்ந்தேன். என் பெற்றோர்  டாடா நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தனர். வட மாநிலங்களில் படித்த போது, பள்ளிப் படிப்பில் இந்தி கட்டாயமாக இரண்டாம் மொழியாக படிக்க வேண்டும்; சமஸ்க்ருதத்தை மூன்றாம் மொழியாக படித்தாக வேண்டும் என்ற சூழல் இருந்தது.
என் பெற்றோர், வீட்டில் தமிழ் கற்றுக் கொடுக்கத்  தொடங்கினர். தமிழ் என்  தாய் மொழியாக இருந்தாலும் தமிழ் மொழியின் சிறப்பை, அப்போது உணர முடியவில்லை. தமிழ் கற்க பல ஆண்டுகள் எடுத்தேன்.
பிறகு, இங்கிலாந்தில் உள்ள ஷேபீல்த் ஹாலம் பல்கலைக்கழகத்தில் கணினி துறையில் பட்டப் படிப்பை முடித்தேன் அதன் பின் , முனைவர் பட்டப் படிப்பிற்கான ஆராய்ச்சிக்கு, ‘கணினித் தமிழ்’ என்ற  தலைப்பை தேர்ந்தெடுத்துள்ளேன்.
இங்கிலாந்தில், நான் படித்துக் கொண்டிருந்த போது, நிகழ்ந்த ஒரு சம்பவம் தான் இந்த ஆராய்ச்சிக்கான தொடக்கப் புள்ளி என்று சொல்லுவேன். ஒரு முறை, வகுப்பை முடித்து வீட்டிற்கு திரும்பினேன். அப்போது ஒரு ஆங்கிலேய நண்பர் முன்னிலையில்,  என் அம்மாவிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டு இருந்தேன் – ஆங்கிலம் கலந்த தமிழில். ‘breakfast, lunch, room, class, three, afternoon, morning’ போன்ற சொற்கள் என் உரையாடலில் இடம் பெற்றது.
அப்போது மொழி மீது, நான் அதிக கவனம் செலுத்தியதில்லை. என் உரையாடலை கவனித்த ஆங்கில நண்பர்,  ‘நீங்கள் பயன் படுத்திய ஆங்கில சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்கள் இல்லையா’ என்றார்.
இருக்கிறது என்று பதிலளித்தேன். ‘பிறகு ஏன், அந்த சொற்களை பயன்படுத்தவில்லை’ என்று கேள்வி எழுப்பினார். அந்தக் கேள்விக்கு, அப்போது என்னிடம் பதில் இல்லை. என்றாலும் அந்த கேள்வி சிந்திக்க வைத்தது. பிறகு என் சுய ஆர்வத்தில், நான் அடிக்கடி பயன்படுத்தும் ஆங்கிலச் சொற்களை தமிழில் பேசி பழக்கத்தில் கொண்டு வர முயற்ச்சித்தேன். இரண்டு ஆண்டுகளுக்கு பின், எளிமையான சொற்களை பயன்படுத்தி தமிழகத்தில்  என் நண்பர்களிடம் பேசிய போது, ‘ஏன் ரொம்ப தூய்மையா தமிழை பேசுற… சாதாரணமா பேசலாமே’ என்று கேட்டனர்.
இவர்கள் குறிப்பிடும், ‘சாதாரணத் தமிழ்’ என்பது ஆங்கிலம் கலந்தத் தமிழ் என்று பிறகு அறிந்தேன். அப்போது தான் மொழி சார்ந்த நவீன தொழில்நுட்பங்களை, தமிழில் கொண்டு வர, என்ன சிக்கல் உள்ளது என யோசித்தேன்.
தமிழ் மென்பொருள் தொழில்நுட்பங்களுக்கு ஆங்கிலம், அரபிக் மண்டரின் போன்ற மொழிகள் போல, சந்தையும் வரவேற்ப்பும் இல்லையா என்று என்ற கேள்வி வந்தது. அந்த கேள்வியை ஆராய்ச்சியாக மாற்றியுள்ளேன்.

தமிழ் மொழியை நவீனப்படுத்துவது தொடர்பான ஆய்வில் முன் தொடர்ச்சிகள் உள்ளதா
மொழி  சார்ந்த தொழில்நுட்ப ஆராய்ச்சி, உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அந்த ஆராய்ச்சி இலக்கியங்களை படிக்கும் போது, மொழியை பயன்படுத்தும் பயனர் சமூகத்திற்காக தான் தொழில்நுட்பங்கள் உருவாக்கப்படுகின்றன.
அதே போல தமிழ் மொழி சார்ந்த தொழில்நுட்ப ஆராய்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன. இருப்பினும் ஆங்கிலம், மண்டரின், டொச் போன்ற மொழிகள் போல தமிழ் மொழிக்கான ஆராய்ச்சி வளர்ந்திருக்கிறதா என்ற கேள்வி மிகவும் அவசியமானது.
குரல் அடையாளப்படுத்துதல், பேச்சை அடையாளப் படுத்துதல் போன்ற தொழில்நுட்பங்கள் இன்று அம்மொழிகளில் ஓரளவிற்கு பயனில் உள்ளது. ஆனால் தமிழ் மொழியை பொறுத்த வரை, அது தொடக்க நிலையில் இருக்கிறது என்றே சொல்வேன்.
இது போன்ற ஆராய்ச்சிகளில் தமிழர்களால், தமிழ் மொழியில் புலமை பெற்றவர்களால் மட்டுமே ஈடுபட இயலும்.

அறிவியலில் நவீனத் தமிழ் எந்த அளவிற்கு வளர்ச்சியடைந்துள்ளதாக கருதுகிறீர்கள்…
தொழில்நுட்பங்களில் மொழி வளருவதற்கு உள்ளீடு மிக முக்கியமானது. தமிழில், எளிமையாக உள்ளீடு செய்ய வசதி இருக்கிறதா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இன்று,  தமிழ் 99 விசைப்பலகை, ஒலிபெயர்வு மென்பொருள் போன்றவை, உள்ளீடு செய்வதற்கு வழி வகுத்து கொடுக்கிறது. அதில், ஒலிபெயர்வின் மூலம் உள்ளீடு செய்வது அறிவுப்பூர்வமானது அல்ல என்ற என் ஆய்வு சார்ந்த முடிவுகள், சிங்கப்பூரில் நடைபெற்ற உலகத் தமிழ் இணைய மாநாட்டில் ஏற்கப்பட்டது. அந்த ஆய்வு, ஆஷிக் அலி மற்றும் முனைவர் பாபக் கசையுடன் இணைந்து சமர்பிக்கப்பட்டது.
இணையத்தில், 0.1% விழுக்காடு தகவல்கள் மட்டுமே தமிழில் உள்ளதாக, மொழி ஆராய்ச்சி இலக்கியங்கள் கூறுகின்றன. இன்று பலவிதமாக தமிழ் உள்ளீடுக்கான வசதி இருந்தபோதிலும், இளைஞர்கள் ரோமன் எழுத்துருவத்தில் தமிழை உள்ளீடு செய்து எழுதுகின்றனர். தொழில்நுட்பத்தில் மொழியின் வளர்ச்சி அந்த மொழியை தாய் மொழியாக பேசும் மக்களை பொறுத்து இருக்கிறது என்றே சொல்வேன்.

தமிழ்  மொழியை நவீனப் படுத்தும் போது  ஏற்படும் சிக்கல்கள் என்ன…
ஒரு மொழி தொழில்நுட்பத்தில் வளர்ச்சியடைய வேண்டுமெனில், அது மக்களால் நன்கு பேசப்பட வேண்டும். தமிழை பொறுத்த வரை சில சிக்கல்கள் இருப்பதாக கருதுகிறேன்:
* மொழி மீதான மக்களின் மனப்பான்மை : என்னை பொறுத்த வரை இது தான் அடிப்படை. மக்கள்,  தம் தாய் மொழியை எப்படி பார்கிறார்கள் ? அதை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பது மிக முக்கியம்.
* உச்சரிப்பு: மொழி சார்ந்த தொழில்நுட்பங்களுக்கு உச்சரிப்பு மிக முக்கியமானது. தமிழுக்கு இது மிகவும் பொருந்தும். ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன். ‘மல பேயுது’ என்று சொல்லிவிட்டு,  ‘மழை பெய்யுது’ என்று எழுத இயலாது. எப்படி உச்சரிக்கப்படுகிறதோ, அப்படியே எழுதியாக வேண்டும்.
*மொழி கலப்பு: மொழி கலப்பிற்கு பல காரணங்கள் உள்ளன என்னை பொறுத்த வரை,  மொழி கலப்பை,  ‘காலத்தின் புதுநடை’ என்று கருத முடியாது.  பேச்சை அடையாளப்படுத்தும் தொழில்நுட்பத்தில், ஒரு மொழியே சாத்தியம். இரு மொழி பதிவுக்கான ஆராய்ச்சியும் நடைபெற்றுவருகிறது . ஆனால், பல மொழிகளை கலந்து பேசும் சூழலில், இது போன்ற தொழில்நுட்பங்களை உருவாக்குவது கடினமானது என்பது என் கருத்து.
* எழுத்துருவம்: பொதுவாக,  மொழிக்கான எழுத்துருவத்தில் எழுதப்பட வேண்டும். ஆனால், தமிழ்ச் சூழலில், குறிப்பாக ஆங்கிலம் கலந்து தமிழ் பேசும் சூழலில் எழுத்துருவமும் மாறுவதை என் பல ஆய்வுகளில் கண்டேன். தமிழை, ‘ரோமன் எழுத்துருவத்தில் எழுதுவது இயல்பாகவே மாறிவிட்டது.
மொழியில் தொழில்நுட்பங்களை அணுகும் போது, அந்த மொழி சார்ந்த சமூகவியல் பார்வை மிகவும் அவசியம் என்று கருதுகிறேன்.

உலக மொழிகளில் தொழில் நுட்பங்களுக்கும்  தமிழில் தொழில் நுட்பம் உருவாவதற்கும் உள்ள வேறுபாடுகள் என்ன என்று நினைக்கிறீர்கள்…
எல்லா மொழிகளையும் போலவே, தமிழுக்கும் பல வண்ணங்கள் உள்ளன. தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பேச்சுத் தமிழ் மாறுபடுகிறது. இருப்பினும் தமிழில் உள்ள சிறப்பு, அடிப்படையான ‘ஒலி’ உச்சரிப்பு எங்கு வாழ்ந்தாலும் ஒரே மாதிரியாக உள்ளது.
இன்று இந்திய மொழிகளில், தமிழ் சர்வதேச மொழி என்று குறிப்பிடலாம். இலங்கை, சிங்கப்பூரில் ஆட்சி மொழியாக தமிழ் உள்ளது.  மோரீஷியஸ், ரீயுனியன், தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளிலும் தமிழுக்கு அங்கீகாரம் உண்டு. எனவே இந்நாடுகளில் தமிழ் வேறுபட்டிருப்பது அதிசயம் இல்லை. ஆனால், ரீயுனியன் போன்ற நாடுகளில்  தமிழர்களாய் அடையாளப்படுத்துபவர்களுக்கு, தமிழ் எழுதப் படிக்க தெரியாது, ஓரளவிற்கு மட்டுமே பேசத் தெரியும். ஆங்கிலம் பேசும் நாடுகளில் வாழும் தமிழர்களின் தமிழ் பெரும்பாலும் ஆங்கிலம் கலந்ததாகத்தான் உள்ளது.
சிங்கப்பூரில் ஆங்கிலத்தை முதன்மைப்படுத்தி இருந்தாலும் அங்கு வாழும் தமிழர்கள் பெரும்பாலும் கலப்பில்லாமல் பேசுவதை நான் கண்டேன். இலங்கையில் தமிழ் பயிற்று மொழியாக மட்டுமல்லாமல் தமிழை முதன்மைப்படுத்தி இருப்பதால், பெரும்பாலும் தமிழை தமிழாக தனித்து பேசக்கூடிய திறன் இருப்பதாக கருதுகிறேன்.
இருப்பினும் பெரும்பாலானத் தமிழர்களுக்கு, ‘ழ’ ,‘ள’ வை உச்சரிப்பதில் சிக்கல் இருப்பதை காண முடிந்தது.
உரையாடலை வரிவடிவமாக உருவாக்கும்  மென்பொருள் தொழில்நுட்பம் உலகளவில் எந்த அளவு வளர்ந்துள்ளது.  தமிழில் முயற்சி வெற்றி அடைந்திருக்கிறதா…
ஆங்கிலம், அரபிக், பிரெஞ்சு போன்ற மொழிகளில் இத்தகையான தொழில்நுட்பம் மிகுந்த வளர்ச்சி அடைந்து வரவேற்ப்பை பெற்றிருக்கிறது. தாய், இந்தி, தமிழ் போன்ற மொழிகளில் இது போன்ற தொழில்நுட்பங்களுக்கான ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.
தமிழில், இது தொடக்க நிலையில்தான் இருப்பதாக  கருதுகிறேன். இதை அடுத்தக்  கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும் என்று நம்புகிறேன். அதற்கு சமூகத்தின் ஒத்துழைப்பு தேவை.

இதில் எழும் சிக்கல்களை தீர்க்க வழிவகை உண்டா?
என் ஆராய்ச்சியை மொழி மற்றும் சமூகம் சார்ந்தத் தொழில்நுட்ப ஆராய்ச்சி என்றே பார்க்கிறேன். எனவே இதில் மொழின் மதிப்பு,  பொருளாதார முக்கியத்துவம், மொழி மீதான, மக்களின் மனப்பான்மை போன்ற பல விஷயங்கள் உள்ளடங்கியுள்ளன. சிலவற்றுக்கு தொழில்நுட்ப ரீதியில் தீர்வு காண முடியும் ஆனால் சிலவற்றுக்கான தீர்வு, சமூகத்தில் இருந்து வர வேண்டி இருக்கும்.

உங்கள் ஆராய்ச்சி எந்தளவிற்கு தமிழ் மொழிக்கு உதவும்?
இந்த கேள்விக்கு  உடனடியாக பதில் கொடுக்க முடியாது. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்! என் ஆராய்ச்சி கண்டிப்பாக மக்களை சிந்திக்க வைக்கும். மொழியை தொழில்நுட்பத்தில் அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்ல,  தமிழ் சூழலில் ஒரு புதிய துறையை உருவாக்கும் என்று  நம்புகின்றேன்.
மொழியின் மதிப்பை மட்டுமின்றி அதை தொழில்நுட்ப ரீதியாக எவ்வாறு கொண்டு செல்லலாம், அதுனால் சமூகத்திற்கும் மொழிக்கும் ஏற்படும் பயன்  போன்றவற்றை எடுத்துக்கூறும் விதமாக அமையும் என்று எண்ணுகிறேன்.
தமிழ்ச் சூழலில் என் ஆராய்ச்சி, ஒரு புதிய முயற்சி என்று கருதுகிறேன். இதில் தொழில்நுட்பம் சார்ந்த சிக்கல்களை கண்டுப்பிடித்து அதற்கு சில தீர்வுகளை முன் வைப்பேன். அடிப்படையில் அது மக்கள் மத்தியில் மொழி மீது விழிப்புணர்வை ஏற்படுத்தும். அதுவே தமிழில் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றத்தின் வெற்றிக்கான முதல் படியாக இருக்கும் என்பேன்.
என் ஆராய்ச்சி பணிகள் பற்றி பல மாநாடுகளில் கட்டுரை சமர்பித்து இருக்கின்றேன். 2014ம் ஆண்டு புதுச்சேரியில் நடைபெற்ற உலகத் தமிழ் இணைய மாநாட்டில் என் ஆய்வுக் கட்டுரை சிறந்த ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆஷிக் அலி மற்றும் முனைவர் கசாயுடன் இணைந்து என் ஆய்வுக்கட்டுரை,  2015ம் ஆண்டு சிங்கப்பூரில் மிகுந்த வரவேற்பை பெற்றது. கடந்த, 2015 ல் கணினித் தமிழுக்கு ஆற்றிய சேவையை பாராட்டி தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் என்னை கௌரவித்தார்.  என் ஆராய்ச்சி ஓரளவிற்கு வரவேற்ப்பை பெற்றிருப்பதாக கருதுகிறேன் எனினும் இன்னும் செல்ல  வேண்டிய துாரம் அதிகம் இருப்பதாக எண்ணுகிறேன்.
இந்த தருணத்தில் தமிழின் அருமையும் பெருமையும் எடுத்துச் சொல்லி வளர்த்த  என் பெற்றோருக்கும், தமிழை மிக எளிமையாக ஊட்டிய என் பாட்டிக்கும், வாழ்க்கை மற்றும் ஆராய்ச்சியில் தவறுகளை செய்ய அனுமதித்து அதை, திருத்தி என்னை ஊக்குவிக்கும் ஆஷிக் அவர்களுக்கும், நான் வெற்றி அடைய வேண்டும் என்ற எண்ணத்துடன் கடினங்களை பொறுத்திருக்கும் என் மனைவிக்கும்  நெஞ்சார்ந்த நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்.