Design a site like this with WordPress.com
தொடங்கவும்

கடுவாய் அனுப்பிய துண்டு சீட்டு

பள்ளிக்கு, காலை, 8:00 மணிக்கு முன்பே கடுவாய் வந்துவிடும். வளாகத்தை நிதானமாக அளந்து, செடி, கொடி, மரம், வழி அரண் அரளிகள், கிணற்றடி, தோட்டம், கக்கூசுகள், ஸ்டாப் ரூம், வகுப்பறை, ஆய்வகம் என, கூர் நோக்கி, கண்காணிக்கும். பின், அலுவலக அறைக்கு சென்று அமரும்.
பள்ளி, ‘ப’ வடிவ கட்டடத்தில், தென்கிழக்கு மூலையில், அந்த அறை இருந்தது. எப்போதாவது, வகுப்பறைகள் இரைச்சலால் அதிர்ந்தால், நாற்காலியின் இழுவை ஒலி கேட்கும். அவ்வளவுதான்… அனைத்தும் அடங்கிவிடும். அமைதி துலங்கி நிற்கும்.
பள்ளி வளாகத்துக்குள் வர இரண்டு வழிகள். இரண்டும் எதிர் திசைகளில்… அவற்றை, கண்காணிக்கும் பாணி வியப்பூட்டும். புதிதாக நுழைபவரை, மிக எளிதாக கண்டுபிடித்துவிடும் திறன்மிக்க கடுவாய் அது.
மயிலாடி, ரிங்கல் தொபே பள்ளியில், 6 ம் வகுப்பு சேரும் முன், அச்சுறுத்தலோடு அறிமுகமான பெயர்தான் கடுவாய். சேர்ந்த பின், அந்த பெயர் மறைந்து, ஒய்.ஆர்.டி., என்பது, மனதில் நிறைந்தது. தலைமை ஆசிரியர் ஒய். ரெஜினால்டு டேவிஸ் பெயர் சுருக்கம்தான் அது.
ஆறு ஆண்டுகள்… அவரது ஆளுமையைப் பார்த்து வியந்திருக்கிறேன். ஒழுக்கத்தை, நேர்மையை, எங்கள் வாழ்வுடன் இணைக்க, அவரது நடத்தை, முன் நிபந்தனையாக இருந்தது. என் அப்பா கற்றுத்தந்தவறை, வலுவாக்கிய தளம் அவரது.
காலை, 8:00 மணிக்கு முன் துவங்கி, இரவு, 7:00 மணிக்கு பின் முடியும் அவரது பணி. எங்கேயும் இருப்பார். எது நடந்தாலும் கவனத்துக்கு சென்றுவிடும். கல்வி சுற்றலாக்களில் அவர் பங்கேற்க மாட்டார். ஆனால், புறப்படும் போதும், முடியும் போதும் அவர் இருப்பார். ஆசிரியர்களுடன், அரட்டை அடிக்கமாட்டார்; வளர்ச்சி உரையாடல் நடத்துவார்.
அது, 9 ம் வகுப்பில் என்று நினைவு. அதிகாலையில், அப்பாவுடன் வயலுக்கு சென்றுவிட்டேன். பருவமழை காலம். மேகம் கவிந்திருந்ததால், நேரம் சரியாக தெரியவில்லை. தாமதம் ஆகிவிட்டது. சாலையில் நின்று பள்ளி வளாகத்தை கவனித்தேன். அவர், கண்ணில் படவில்லை.
உறுதி செய்தபடி, ஓரமாக நகர்ந்து, வகுப்புக்கு போய்விட்டேன். சற்று நேரத்தில், பீயுன் ஒரு துண்டு சீட்டை வகுப்பு ஆசிரியரிடம் கொடுத்தார். தலைமை ஆசிரியர், என்னை அழைத்த சீட்டு அது.
பயந்து நடுங்கியபடி, அவர் அறைக்குப் போனேன். அவரது கைகடிகார சங்கிலி அவிழ, அவிழ அடியும், குத்தும் வாங்கி வந்தேன். மதிய இடைவேளைக்கு பின் மீண்டும் அழைப்பு. நடுங்கிக் கொண்டே போனேன்.
‘வயலுல இருந்து தானே வந்தே… பின்னே நேரா கிளாசுக்கு போக வேண்டியதுதானே. ஏன் ஒளிச்சே…’ என, நெகிழ்ந்தார். ஒழுக்கமும், நேர்மையும், நிர்வாகத்திறனும், காலந்தவறாமையும், அழகியலும்… சொல்லிக் கொண்டே போகலாம் கீர்த்தியை.
பள்ளி வளாகத்தில், அழகிய வடிவமைப்புடன் தோட்டம் இருந்தது. தங்க அரளி செடிகளால் வேலி அமைத்து, ஒழுங்குபடுத்தி, மாணவர்களே பராமரிக்கும் வகையில், செயல் திட்டம் உருவாக்கியிருந்தார்.
விடுப்பு ஆசிரியர் வகுப்புக்கு, வழக்கமாக அவர் பொறுப்பேற்பார். வளாகத்தில் ஒரு மரத்தடியில் அமர வைத்து பாடம் நடத்துவார். வகுப்பு, இயல்பாக, இயற்கையாக அமையும். செயல்முறையாக இருக்கும்.
காக்கை பறப்பதை பார்… வண்ணங்களை கவனி… கூர்ந்து நோக்கும் அலகை நோக்கு… என்ற பாணியில் பாடம் நடக்கும்.

மண்வெட்டியின், கைப்பிடி முனைக்கு, ‘வெப்புதாங்கி’ என்ற பெயர் இருப்பதை, உணர்த்தியது அவர்தான். ஒரு விவசாயின் மகனாக, வெட்கப்பட்ட தருணம் அது.
மொழி, சூழல், பண்பு, நடத்தை, அறிவியல், இயற்கை, இலக்கியம் என, சாதுார்யமாக தொட்டு செல்லும் அவரது வகுப்பு. உயர்ந்த விழுமியங்களை, மனசில் உணர்த்தி, நேரத்தை கலகலப்பாக கரைக்கும்.
ஒரு ஆசிரியர் தின நாள். 1987 என, நினைக்கிறேன். நல்லாசிரியர் விருது நிகழ்ச்சி, சென்னை, தியாராயநகர், சாரதா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. செய்தி சேகரிக்க, சென்றிருந்தேன்.
முன் வரிசையில், நிருபர்களுக்கான இடம். அதன் அருகே நின்று, இருக்கைகளை பார்த்துக் கொண்டே வந்தேன். ஒன்று கவனத்தில் நின்றது. அவர்தான்… உறுதிப்படுத்திக் கொள்ள, செய்தி குறிப்பை வாசித்தேன். பெயர் இருந்தது.
விருது வாங்கிக் கொண்டு, இறங்கி வந்தார். அவர் முன் விழுந்து வணங்கினேன். மொத்த நிகழ்வும் ஒரு கணம் நின்று, கவனம் எங்கள் மீது திரும்பியது. என்னை இறுக அணைத்துக் கொண்டார். பார்வையில், ‘யார் நீ…’ என்ற கேள்வி. கற்ற காலத்தை சொல்லி, அறிமுகப்படுத்திக் கொண்டேன்.
மிகவும் நெகிழ்ந்து, மகிழ்ந்தார்.
பின்னர், இருமுறை நாகர்கோவில், கிறிஸ்டோபர் நகரில் அவரது வீட்டில் சந்தித்து, உலாவலுடன் நீண்ட உரையாடல் நடத்தியுள்ளேன்.
ஆசிரியர் தினம் மட்டும் அல்ல… நேர்மை, ஒழுக்கம், நிர்வாகம் பற்றிய தகவல்களை பகிரும் போதெல்லாம், என் தலைமை ஆசிரியர் ஒய். ரெஜினால்டு டேவிஸ் அவர்களை மேற்கோள் காட்ட தவறியதில்லை.

ஆசிரியர்: malaramuthan

Journalism for sustainability Since 1983

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: