மரணம் நிகழ்ந்துவிட்டதாக காலையில் செய்தி வந்தது. இது யாரையும் பாதித்திருக்க வாய்ப்பில்லை. யாரும் அஞ்சலிக் குறிப்பு எழுதப்போவதுமில்லை. அக்கம் பக்கத்தவர் சொல்லும், ‘ கிடையில் விழுந்து அழுந்தாமல் போனாரே’ என்ற வார்த்தைகள் மட்டுமே மறைந்தவருக்கு அனுகூலமானவை. .
உலகத்துக்கோ, இந்தியாவுக்கோ, தமிழ்நாட்டுக்கோ, கன்னியாகுமரி மாவட்டத்துக்கோ, ஆலடிவிளை ஊருக்கோ, அவர் மரணத்தால் இழப்பு எதுவும் இல்லை. சொல்லப்போனால், தமிழக அரசுக்கு கொஞ்சம் அனுசரணை உண்டு.
ஆம்… அவருக்கு வழங்க வேண்டிய, மாதாந்திர உதவித்தொகையை, அரசு இனி வழங்க வேண்டியதில்லை. அவர் குறித்த ஆவணங்கள் எதையும் பராமரிக்க வேண்டியதில்லை.
உலகமோ அல்லது வாழ்ந்த வட்டாரமோ நன்மை பெற அவர் செய்த சேவை ஏதாவது உண்டா…
ஏராளம்… ஏராளம்…
செல்லம் என்ற செல்லம்மா, 2018 மே 28, காலை மரணம் அடைந்தார். அனேகமாக, 87 வயதுக்குள் இருக்கலாம். கன்னியாகுமரி மாவட்டம், ஆலடிவிளை ஊரில், மருந்துவாழ்மலை வலது பாசனக்கால்வாய் ஓரம், பொதுப்பணி்த்துறை புறம்போக்கு நிலத்தில் குடிசை அமைத்து குடியிருந்தார்.
நீண்ட தனிமையான வாழ்க்கை.
மண வாழ்க்கை முறையாக அமையவில்லை. 16 வது வயதில் கன்னிமேரி கதைபோல் ஒரு பெண் குழந்தைக்கு தாயானார்.
அப்போது நான் பிறந்திருக்கவில்லை. கதையை பிறர் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன்.
தன்னந்தனியாக வாழ்க்கை.விவசாய துணை வேலைகள் செய்வார். நாற்று நட, களை எடுக்க என்று, கூலி வேலைக்கு செல்வார்.
சிறுவனாக இருந்த போதே, அவரது வேலை ஒருங்கிணைப்பு ஆளுமை கண்டு வியந்திருக்கிறேன். 60 முதல் 70 பெண்கள் கொண்ட குழுவை, மிகச் சிறந்த ஆளுமையுடன் வழிநடத்துவார். விவசாய துணைப் பணிகளை ஏற்பது, பகிர்வது, சம்பளம் பெற்று கொடுப்பது, கண்காணிப்பது, வழி நடத்துவது என, அவரது ஆளுமை பரந்து விரிந்து கிடந்ததைக் கண்டு வியந்திருக்கிறேன்.
ஒருங்கிணைப்பை மட்டுமே செய்யாமல், அவர்களில் ஒருவராக களத்தில் பணியாற்றுவார். எங்கள் வயல்களில் வேலைக்கு அவரது குழுவினர்தான். ஒருங்கிணைப்பை, கூலி பெறும் பணியாக பார்க்க மாட்டார்.
செயல்கள் எல்லாம் வெட்டு ஒன்று, துண்டு ரெண்டு என கறாராக இருக்கும். கனிவானவர், கடும் முன் கோபி, கோபம் எழுச்சி பெ றும் போது, வார்த்தைகளுக்கு பொருள் தேட சிரமப்பட வேண்டியிருக்கும். எல்லாம் அத்துடன் முடிந்துவிட்டதாக வசவுகளை வீசி சடைவார்.
மறுநாள் எல்லாம் மறையும்… புது துலக்கத்துடன் வருவார்.
பணி ஒருங்கிணைப்பில், உழைப்பு சுரண்டலை அதிகம் இருக்கும். அரசு மற்றும் தனியார் நிர்வாகங்களில் மேல் மட்டத்தில் இருந்து சாதாரண கூலி பணிகளில் வரை சுரண்டல் சுழன்றடிப்பதை பார்த்திருக்கிறேன். இவரது உழைப்பு குழுவில் ஒரு முறை கூட, உழைப்பு சுரண்டல் நடந்ததாக அறிந்ததில்லை. அது போன்ற விமர்சனத்தையும் கேட்டதில்லை.
நடத்தை விஷயத்திலும் அப்படித்தான். உடல் இச்சைக்காய் அவர் ஓடித்திரிந்ததாக ஒரு விரல் கூட சுட்டியதில்லை.
ஒரே உறவு… ஒரே குழந்தை… பின் இறுக்கம் நிறைந்த மனநிலையுடன் வாழ்க்கை.
சுற்றித்திரிந்த ஆண் குரங்குகளிடம், பிடிபடாமல் கிட்டத்தட்ட, 70 வருடங்களை கடந்துள்ளார் என்பது வியப்பாக இருக்கிறது.
அவரது வாழ்க்கை போராட்டமானது… ஆனால் நம்பிக்கை நிறைந்தது. பேச்சு வாக்கில் பல முறை, அந்த நம்பிக்கையின் அடிநாதம் பற்றி கேட்டு அறிய முயன்றுள்ளேன்.
ஒருமுறை கூட அனுபவ வெளியை, இழித்தோ, பழித்தோ பேசியதில்லை. எதையும் விமர்சனப் பூர்வமாக கொண்டதில்லை. சிந்திக்க மறுக்கிறாரோ என்று கூட நினைத்திருக்கிறேன்.
அவரது வியப்பான தோல்வி, ஒரு சிலையாக நிற்கிறது. அதை தினமும் வணங்கவும் அவர் தயங்கவில்லை. ஒருமுறை இது பற்றி கேட்டேன். எந்த அதிருப்தியும் தெரிவிக்கவில்லை. அதை நம்பிக்கையாக பார்ப்பதாக சொன்னார்.
அவரது வாழ்வு வியப்புகளால் நிரம்பியது. அவரது நம்பிக்கையும், உறுதியும் மேன்மையை காட்டுவது… உற்பத்தியில் அவரது உழைப்பு அளவிட முடியாதது.
நீண்ட துயிலுக்கு போய்விட்ட அவரது, உடல் மற்றொன்றாய் மாறிக் கொண்டிருக்கிறது. கண்ணீர் அஞ்சலி.